Mansoor Ali Khan: “த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு” - மீண்டும் பிரச்சனையை கிளப்பும் மன்சூர் அலிகான்..
நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பூ மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பூ மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
நவம்பர் 11 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் தான் நடித்தும், அப்படத்தில் ஹீரோயினான த்ரிஷாவுடனான காட்சிகள் எதுவும் வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு நடிகைகள் த்ரிஷா,மாளவிகா மோகனன், குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் கண்டத்தை தெரிவித்தது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் உத்தரவின் பேரில் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி தன் விளக்கத்தை கொடுத்தார். நவம்பர் 24 ஆம் தேதி நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு த்ரிஷாவும் ‘தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்' என பதிலளித்தார். இதனால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்ததாக நினைக்கப்பட்டது.
இப்படியான நிலையில் நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பூ மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!
11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முடிந்து போன பிரச்சினையை மீண்டும் மன்சூர் அலிகான் கிளப்பியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.