Mari Selvaraj Movies: நாளை ரிலீசாகும் மாமன்னன்.. மாரி செல்வராஜ் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?
Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் நாளை அதாவது ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாகிறது.
![Mari Selvaraj Movies: நாளை ரிலீசாகும் மாமன்னன்.. மாரி செல்வராஜ் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்? Maamannan Why Mari Selvaraj Movies Faces Opposition Here is What You Need to Know Mari Selvaraj Movies: நாளை ரிலீசாகும் மாமன்னன்.. மாரி செல்வராஜ் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/479fc1c4257525cf4ba7436ba6d5064e1687958490251102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உள்ளவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு திரைப்படங்களுமே சாதியால் இந்த சமூகம் எப்படி பிளவுபட்டு, ஒரு குழு மற்றொரு குழுவை எப்படி ஆதிக்கம் செய்கிறது என்பது குறித்து விளக்கின.
உரையாடலுக்கு அழைத்த மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் இறுதிக் காட்சி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகியின் தந்தையும் அமர்ந்து உரையாடுவதைப் போல் இருக்கும். இந்தக் காட்சி திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளியது.
அதேபோல், இரண்டாவது திரைப்படமான கர்ணனில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஊர் மக்கள் தங்களுக்கான உரிமையை அரசிடம் கேட்டு பெற முயற்சி செய்த போது, சாதிய மனநிலை கொண்ட அரசு அதிகாரிகள் எப்படி அந்த மக்களையும் அவர்களது உடமைகளையும் அடித்து ஒழித்தனர் என்பது குறித்தும், அதிலிருந்து மக்கள் தங்களை எப்படி காத்துக்கொண்டனர் என்பது குறித்தும் அந்த படம் இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆதரவுகளும் எதிர்ப்புகளும்
இதுமாதிரியான திரைப்படங்களை கொண்டாட உலக சினிமா ரசிகர்கள் இருக்கும் அளவிற்கு, இதுமாதிரியான படங்களை எதிர்க்கவும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் தனது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களிலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ். தனது நேர்த்தியான படமாக்கத்தால், சினிமா ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற மாரி, தனது கதைக்களம் மற்றும் கதையோட்டத்தால் பொதுமக்கள் மத்தியிலும், வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் மாரி செல்வராஜ் கையாண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கதாநாயகன் என்ற கதைக்களத்தினை பலர் படமாக்கியுள்ளனர். இவர்களில் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து படம் இயக்கி வருகின்றனர். இயக்குநர் பா. ரஞ்சித் திரைப்படங்களின் க்ளைமேக்ஸில் உரிமைக்காக குரல் கொடுக்கும் கதாப்பாத்திரம் ஆதிக்க சமூகத்தால் கொலை செய்யப்படுவதாக இருக்கும்.
பா.ரஞ்சித், வெற்றிமாறன் படங்கள்
அதாவது, காலா, கபாலி உள்ளிட்ட படங்களில் ரஜினி ஏற்று நடித்த கதாப்பாத்திரமும், மெட்ராஸ் திரைப்படத்தில் அன்பு கதாப்பாத்திரமும் கொலை செய்யப்படுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மாவீரன் கிட்டு திரைப்படத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைத் சார்ந்த கதாநாயகன் கொலை செய்யப்படுவதாக திரைக்கதை இருக்கும்.
ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகன் அவமானப்படுத்தப்படுவார், அதனால் அவரது மகன் அதனை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக கொலை செய்யப்படுவான். மேலும், கதை முடிவில் ஆதிக்க மனநிலை உள்ளவர்களைத்தான் தான் கொலை செய்தேன் எனக் கூறி கதாநாயகன் சிறைக்கு செல்லும் முன், கல்வியின் அவசியம் குறித்து விளக்குவதாக முடியும். இந்த படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக கிளம்பியது.
யாரை நோக்கிய கேள்வி?
ஆனால் மாரி செல்வராஜின் திரைப்படத்தில் கதாநாயகன், தன்னை மற்றும் தன்னைச் சார்ந்தவர்களை ஒடுக்கும் போது ஆதிக்க சமூகத்தை கேள்வி கேட்பவனாக இருப்பது மட்டும் இல்லாமல், அவர்களை எதிர்த்து களமாடவும் செய்கிறான். மேலும் தன்னை ஒடுக்க நினைக்கும் மனைநிலையை நோக்கி மிகவும் கூர்மையான சொற்களால் கேள்வி கேட்பவனாகவே கதாப்பாத்திரம் உருவாக்கப்படுகிறது.
கர்ணன் படத்தின் ப்ரீக்ளைமேக்ஸில், கதாநாயகன், அரசு அதிகாரியிடம், “ உங்களுக்கு என் தேவை என்ன என்பது முக்கியமில்லை, என் பிரச்னை என்ன என்பது முக்கியமில்லை. உங்கள் முன் எப்படி நிற்கிறேன், எப்படி பேசுகிறேன் என்பது தான் முக்கியம்” என்ற மிகவும் அழுத்தமான வசனம் இடம்பெற்றிருக்கும். ஆனால் தனது ஆதிக்க சாதி மனநிலையில் இருக்கும் அரசு அதிகாரி, தனது காலில் விழும்படி கூறும்போது கதாநாயகன் அந்த அதிகாரியை கொலை செய்வதுபோல் அந்த காட்சி முடியும்.
மாமன்னனின் கேள்வி!
அதேபோல் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வசனம், “ஊருக்குள் வந்தா அடிப்பியா” என்பது போன்ற வசனம் ஆதிக்க சாதி மனநிலையில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர்கள் தரப்பில் இருந்து, படம் திரையிடப்பட்டால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம் என்ற மிரட்டல்களும் வருகிறது. ஆனால் இவர்களை மாரி செல்வராஜ் தனது படத்தின் மூலம் உரையாடலுக்கு அழைக்கிறார் என்பது புரியாமல் கண்மூடித்தனமாக மிரட்டல்களைத் தொடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு கலைஞனுக்கு மிரட்டலும் ஒரு விமர்சனம்தான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)