Year Ender 2025: லிஸ்ட் ரொம்ப பெருசு.. 2025ல் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்கள்!
Flashback 2025: இந்த ஆண்டு தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் நூற்றுக்கணக்கில் சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்ஜெட் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் சில படங்கள் நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது. அதனைப் பற்றிக் காணலாம்.

2025ம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஓராண்டில் எத்தனையோ விஷயங்கள் மாறி போயிருக்கும். எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியிருக்கும். எதிர்ப்பார்ப்பே இல்லாமல் வந்து நம்மை வியக்க வைத்திருக்கும். அப்படியான வகையில் 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் நூற்றுக்கணக்கில் சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்ஜெட் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் சில படங்கள் நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது. அதை மாதங்கள் வாரியாக நாம் பார்க்கலாம்.
எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்கள்
ஜனவரி: 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல், குடியரசு தினம் வரும். இந்த நேரத்தில் பெரிய படங்கள் வெளியாகி வசூலை குவித்து திரையுலகில் மிகப்பெரிய நம்பிக்கையை உண்டாக்கும். ஆனால் இந்தாண்டு ஜனவரி 10ம் தேதி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றியது. அதேசமயம் 12 ஆண்டுகள் ரிலீசாகாமல் தவித்து வந்த சுந்தர்.சி-யின் மதகஜராஜா படம் ரிலீசாகி ரூ.100 கோடி வசூலைப் பெற்றது.
பிப்ரவரி: பிப்ரவரியில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் வெளியானது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் பெரிதாக செல்லவில்லை. அதேபோல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் தோல்வியடைந்தது.
மார்ச்: மார்ச் மாதத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் முதல் கடல் படமாக அறிவிக்கப்பட்ட கிங்ஸ்டன், ஹாரர் படமாக விளம்பரம் செய்யப்பட்ட முர்முர், விக்ரம் நடித்த வீரதீர சூரன் பாகம் 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாமல் போனது.
ஏப்ரல்: ஏப்ரல் மாதத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடித்த “டெஸ்ட்” படம் நேரடி ஓடிடியில் வெளியானது. அதேபோல் சுந்தர்.சி இயக்கி வடிவேலு நடித்த கேங்கர்ஸ் படம் படமும் பெரிதாக செல்லவில்லை
மே: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ”, விஜய் சேதுபதி நடித்த “ஏஸ்” ஆகிய இருபடங்களும் எதிர்பார்ப்புடன் ரிலீசாகி ஏமாற்றத்தை அளித்தது.
ஜூன்: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்த”தக் லைஃப்” படம் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
ஜூலை: இம்மாதத்தில் வெளியான விமலின் “தேசிங்கு ராஜா 2”, வனிதா விஜயகுமாரின் “மிஸஸ் அண்ட் மிஸ்டர்”, வடிவேலு, ஃபஹத் பாசில் நடித்த மாரீசன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.
ஆகஸ்ட்: இந்த மாதத்தில் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் வெளியான நிலையில் பெரிய படமாக ரஜினிகாந்தின் “கூலி” ரிலீசானது. இப்படம் வசூலை குவித்தாலும் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.
செப்டம்பர்: இந்த செப்டம்பர் மாதம் பேட் கேர்ள், காந்தி கண்ணாடி, மதராஸி, பிளாக் மெயில், கிஸ், சக்தி திருமகன் என பல படங்கள் தியேட்டரில் வெளியாகி பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஓடிடியில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.
அக்டோபர்: அக்டோபர் மாதத்தில் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை, மாரி செல்வராஜின் பைசன் காளமாடன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் ட்யூட், ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது ஆகிய முக்கிய படங்கள் வெளியானது. இதில் டீசல் படம் பெரிய அளவில் செல்லவில்லை
நவம்பர்: நவம்பர் மாதத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காந்தா, கும்கி 2, மாஸ்க், மிடில் கிளாஸ், ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
டிசம்பர்: டிசம்பர் மாதத்தில் படையப்பா படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் வா வாத்தியார் ரிலீஸ் தேதி இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் 2026ம் ஆண்டு பிப்ரவரிக்கு தள்ளிப் போகிறது. இதில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அருண் விஜய்யின் ரெட்ட தல படம் மட்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் தியேட்டரில் வெளியானவையாக பார்க்கப்படுகிறது. இதில் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





















