Highest Overseas Collection: பதான் டூ ஜெயிலர்.. இந்த ஆண்டு வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை செய்த இந்தியப் படங்கள்!
இந்த ஆண்டு வெளியாகி பிற நாடுகளில் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்களின் லிஸ்ட் இதுதான்!
இந்தியத் திரைப்படங்களுக்கு பிற நாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது, குறிப்பாக ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர். ஆர் திரைப்படத்தின் வருகைக்குப் பிறகு இந்திய மொழியில் பிரம்மாண்டமாக உருவாகும் படங்களின் மேல் ஒரு தனி கவனம் குவிந்திருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை வெளியாகி பிற நாடுகளில் அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம். இந்தப் பட்டியலில் பெரும்பாலும் தமிழ் இயக்குநர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதான்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் பதான். ஷாருக் கான், தீபிகா படூகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டவர்கள் நடித்து சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கினார். சுமார் ரூ.225 கோடி செலவில் எடுக்கப்பட்ட பதான் திரைப்படம், உலகம் முழுவதும் மொத்தம் ரூ 1000 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.
ஷாருக் கான் நடித்து அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தையும் பிடித்தது. உலகம் முழுவதும் ஷாருக் கான் ரசிகர்கள் நிறைந்திருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் மட்டுமே மொத்தம் 400 கோடி வசூல் செய்தது பதான் திரைப்படம்.
ஜவான்
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளத் திரைப்படம் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம். ஒரே வரிசையில் ஷாருக் கான் நடித்த இரண்டு படங்கள் இடம்பிடித்திருப்பது அவரது பிற நாடுகளில் அவருக்கு இருக்கும் மார்க்கெட் எவ்வளவு பெரியது என்பதையே காட்டுகிறது. ஷாருக் கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ஜவான் திரைப்ப்படம் வெளியாகிய இரண்டே வாரங்களில் 1000 கோடி வசூலை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. வெளி நாடுகளில் மட்டுமே 14 நாட்களில் மொத்தம் ரூ.314 கோடி வசூல் செய்துள்ளது ஜவான் திரைப்படம்!
ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம், அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களில் விக்ரம் மற்றும் பொன்னியில் செல்வன் முதலிய படங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் இடத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, ஷிவராஜ்குமார், மோகன்லால், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் நடித்த ஜெயிலர் திரைப்படம், உலக ளவில் 600 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது. இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் மட்டும் ரூ.196 கோடி வசூல் செய்தது ஜெயிலர் திரைப்படம்.
ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்த ரொமாண்டில் காமெடி திரைப்படமான ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல், நல்ல வசூலையும் ஈட்டியது. பிற நாடுகளில் மட்டுமே ரூ.164 கோடிகளை வசூல் செய்தது இந்தப் படம்
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த வரிசையில் கடைசியாக இருக்கும் திரைப்படம். இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் ரூ.130 கோடி வசூல் செய்தது இந்தப் படம்.