Leo Day 4 Collection: உலகில் ரூ.300 கோடி; இந்தியாவில் ரூ.200 கோடி - லியோவுக்கு குவியும் மக்கள்.. 4வது நாள் வசூல் நிலவரம்
Leo Day 4 Collection: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் என்ற வசூலை நெருங்கியுள்ளது.
Leo Day 4 Collection: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் வசூல், நான்கு நாட்கள் முடிவில் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்:
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், தொடர் விடுமுறை காரணமாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றன.
சரிந்து எழுச்சி கண்ட வசூல்:
படத்திற்கு நிலவிய எதிர்பார்ப்பு காரணமாக முன்பதிவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, முதல் நாளிலேயே படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாயை வசூலாக அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. அதேநேரம், இரண்டாவது நாளில் படத்தின் வசூல் பாதியாக குறைந்தது. 20ம் தேதி வழக்கமான வேலைநாள் என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், சனிக்குழமை அன்று படத்தின் வசூல் மீண்டும் எழுச்சி பெறத்தொடங்கியது. இதனால் மூன்றாவது நாளில் படத்தின் வசூல் சுமார் ரூ.75 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது.
நான்காவது நாள் வசூல் நிலவரம்:
தொடர்ந்து விடுமுறை நாளான நேற்றும் லியோ படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 80% கூட்டம் இருந்ததாக sacnilk இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நான்காவது நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 90 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ. 28 கோடி, கேரளாவில் ரூ. 8 கோடி, கர்நாடகாவில் ரூ. 5 கோடி, ஆந்திரா/தெலங்கானாவில் ரூ. 4 கோடி மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாக sacnilk தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.300 கோடி ஓவர் - ரூ. 200 கோடி இலக்கு:
இதன் மூலம் லியோ படத்தின் உலகளாவிய மொத்த வசூல் 300 கோடி ரூபாயை கடந்துவிட்டதாகவும், உள்நாட்டில் சுமார் 182 முதல் 184 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், 5ம் நாளான இன்றைய முடிவில் லியோ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ திரைப்படம்:
விஜய் உடன் திரிஷா, கவுதம் மேனம், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் என பெரும் நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்துள்ளது. திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் வெளியானது. மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே படம் வெளியானாலும், தமிழ்நாட்டில் 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சியே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வசூலில் தொடர்ந்து அசத்தி வருகிறது.