Trisha: இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரமா.. லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் அடுத்த படம்
லியோ படத்திற்குப் பின் த்ரிஷா நடிக்க இருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.முற்றிலும் மாறுபாட்ட கதாபாத்திரம் ஒன்றில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன
லியோ படத்தைத் தொடர்ந்து தூங்காநகரம் திரைப்படத்தை இயக்கிய கெளரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை த்ரிஷா.
த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜயுடன் நடித்து வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. வரும் ஜூலை மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதுவரை த்ரிஷா நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்தப் படத்தின் த்ரிஷா நடிக்க இருக்கும் கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவருக்கு மிகவும் சவாலானதாக இருக்குமென்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான ஒரு படமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு , மலையாளம் நடிகர்கள் என இந்தப் படத்தின் படக்குழுவைப் பற்றிய தகவல்கள் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் உள்ளன.
இயக்குனர் கெளரவ் நாராயணன் தூங்காநகரம் மற்றும் சிகரம் தொடு ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். பொதுவாகவே இவரது படங்கள் விறுவிறுப்பான கதைசொல்லல் முறையைக் கொண்டவை. த்ரிஷா நடிக்கவிருக்கும் இந்தப் படமும் கெளரவின் திரைக்கதை பாணியில் அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வமானத் தகவல் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடார்ந்து நடிகை த்ரிஷாவின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிட்டதட்ட தமிழ் சினிமாவில் இது அவரது ரீ எண்ட்ரி என்றே சொல்லலாம். தற்போது ரசிகர்கள் லீயோ படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பதை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
விஜய் மற்றும் த்ரிஷா இதற்கு முன்பாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, ஆகியப் படங்களில் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து இருவரும் திரையில் இணைந்து நடிப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லீயோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின், கெளதம் மேனன், அர்ஹுன் சர்ஜா மற்றும் சஞ்ஜய் தத் ஆகியவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.