Yuvraj Singh: உச்சகட்ட எதிர்பார்ப்பு! திரைப்படமாகிறது உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்சிங் வாழ்க்கை! ஹீரோ யாரு?
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yuvraj Singh Biopic : இந்திய கிரிக்கெட்டிலும், உலக கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்தவர் யுவராஜ்சிங். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த இவர் பல நெருக்கடியான தருணத்தில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தவர்
Yuvraj Singh Biopic : திரைப்படமாகும் யுவராஜ் சிங் வாழ்க்கை:
அதிரடி மன்னனாக சிக்ஸர் மன்னனாக திகழ்ந்த யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ்சிங்கின் வாழ்க்கை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டி – சீரீஸ் தயாரிக்க உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான பூஷன்குமார் மற்றும் ரவி பக்சந்த்கா தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதாநாயகன் யார்?
இந்த நிலையில், படத்தில் யுவராஜ்சிங் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை இயக்குனர், இசை மற்றும் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் நடித்த மறைந்த ராஜ்புத்சிங்கும் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட யுவராஜ்சிங்கின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கும் நாயகன் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகக்கோப்பை நாயகன்:
உலகக்கோப்பை நாயகன், அதிரடி வீரர், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர் என்ற பல பக்கங்களை கொண்டவர் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயதான யுவராஜ்சிங் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 11 அரைசதங்களுடன் 1900 ரன்களும், 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 சதங்களும், 52 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 701 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், இந்திய அணிக்காக 52 டி20 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களுடன் 1177 ரன்கள் எடுத்துள்ளார்.
132 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 750 ரன்கள் எடுத்துள்ளர். சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டி20யில் 28 விக்கெட்டுகளும், ஐ.பி.எல். தொடரில் 36 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்த லெஜண்ட்ரி உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வெற்றி பெற வைத்தவர் யுவராஜ்சிங்