The Greatest of All Time: 31 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஓகே சொன்ன பிரேமலதா!
the greatest of all time படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேரக்டர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் விஜயகாந்தின் கேரக்டர் இடம்பெற உள்ளதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் லியோ படத்துக்குப் பின் the greatest of all time என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், யோகிபாபு, வைபவ் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேரக்டர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல் ஒன்றில் உறுதி செய்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், “விஜய் the greatest of all time படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு 5, 6 முறை வீட்டுக்கு வந்து அப்படம் பற்றி பேசியுள்ளார். நான் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நிலையில் சண்முக பாண்டியனை சந்தித்து விஷயத்தை சொல்லியுள்ளார். நேரடியாக என்னை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நான் கிடைத்த இடைவெளியில் சென்னை வந்திருந்தபோது வெங்கட் பிரபு என்னை வந்து பார்த்தார். இந்த மாதிரி the greatest of all time படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை ஒரு காட்சியில் கொண்டு வரலாம் என நினைத்துள்ளோம். உங்கள் அனுமதி வேண்டும் என கேட்டதோடு விஜய் வெளிப்புற படப்பிடிப்பில் இருப்பதால் உங்களை நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும் என தெரிவித்ததாக கூறினார்.
இன்னைக்கு கேப்டன் விஜயகாந்த் இருக்கும் இடத்தில் இருந்து தான் நான் யோசிக்கிறேன். அவர் இருந்திருந்தால் விஜய்க்கு என்ன சொல்வார் என நினைக்கிறேன். செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து விஜய்யை அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு. எத்தனையோ இயக்குநர்கள் இருந்தபோது 17 படங்கள் விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். அவர் மீது விஜயகாந்துக்கும், எனக்கும் தனிப்பட்ட மரியாதை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் the greatest of all time படத்தில் விஜயகாந்த் காட்சி பற்றி கேட்கும்போது அவரிடத்தில் இருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
விஜயகாந்த் இருந்தால் நிச்சயம் மறுக்க மாட்டார். நானும் மறுக்க மாட்டேன். தேர்தல் முடிந்த பிறகு நல்ல முடிவாக தெரிவிக்கிறேன் என சொல்லியிருக்கிறேன். வெங்கட் பிரபுவையும் சின்ன வயதில் இருந்தே தெரியும். அவரிடம், உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது. விஜய்க்கு விஜயகாந்த் காட்சியை வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக வெங்கட் பிரபு சொன்னார். அதனால் நானும் நல்ல முடிவாக சொல்கிறேன் என தெரிவித்துள்ளேன்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1993 ஆம் ஆண்டு விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டதன் பேரில் செந்தூரப்பாண்டி படத்தில் அப்போது பிரபலமாக இருந்த விஜயகாந்த் நடித்து கொடுத்தார். அப்படம் ரசிகர்களிடம் விஜய்யை கொண்டு சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.