திருமண நாளன்று ரஜினி வீட்டிற்கு சென்ற ராஜேஷ்...ரஜினி கொடுத்த அன்புப் பரிசு
Actor Rajesh : மறைந்த நடிகர் ராஜேஷ் ரஜினிகாந்த் உடனான தனது நட்பு குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் ராஜேஷ் மரணம்
தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகர்களில் ஒருவரான ராஜேஷ், தனது 75 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்க்கபப்ட்டுள்ளது. பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் படத்தில் நடித்ததன் மூலம் இவர் பொதுமக்களால் வெகுவாக அறியப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் 150-க்கும் அதிகமான படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார். கே. பாலச்சந்தர் இயக்கிய "அச்சமில்லை அச்சமில்லை" படத்தில் நடித்த ராஜேஷ் ஏராளமான குணச்சித்திர வேடங்களில் ஏற்று நடித்தார். கமல்ஹாசனுடன் "சத்யா" , "மகாநதி" மற்றும் "விருமாண்டி" போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவருடனான நினைவுகளையும் வேதனையும் பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இரங்கல்
ராஜேஷின் இறப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினியின் மேல் அளவுகடந்த மரியாதையை ராஜேஷ் வைத்திருந்தார். ரஜினியைப் பற்றி ராஜேஷ் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருமண நாளன்று ரஜினியை பார்க்க சென்ற ராஜேஷ்
" அந்த கால மனிதர்களின் நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ரஜினி சார் மிக மிக உயர்ந்தவர். ரஜினி சாரிடம் இரண்டு முறை ரொம்ப நேரம் பேசியிருக்கிறேன். நாம் பேசும்போது நம்மை கூர்மையாக முழு கவனத்துடன் பார்ப்பார். பேசிக் கொண்டு இருந்தபோது நான் இருமினேன். உடனே பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து எனக்கு கொடுத்தார். அது ஆக்டிங் இல்லை. அந்த தருணத்தில் ரஜியின் எமோஷனில் இருந்து அதை செய்கிறார். அவர் பார்க்காதது மாதிரியே தெரியும் ஆனால் பின்னால் யார் இருக்கிறார் என்பதை சொல்வார்.
ஒரு நாள் ரஜினியிடம் உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்றேன். என்னுடைய திருமண நாளன்று அவரைப் பார்க்கச் சென்றேன். என் குடும்பத்துடன் ஒரு புகைப்படம் எடுத்து பாபா முத்திரை போட்ட ஒரு தங்க காசு கொடுத்தார். வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்துவிட்டு சென்றார் ரஜினி . அதுதான் ரஜினி சாருடைய உயர்ந்த குனம். அவர் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்ததற்கு இந்த குண நலன் முக்கிய காரணம். " என ராஜேஷ் தெரிவித்துள்ளார்





















