Lata Mangeshkar Top Tamil Songs : கேட்க கேட்க இனிமை.! காலத்தால் அழியாத லதா மங்கேஷ்கரின் பாடல்கள் லிஸ்ட்!
இந்திய திரையுலகின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 1929ம் ஆண்டு பிறந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராத்தியை பூர்வீகமாக கொண்ட லதா மங்கேஷ்கரின் குரலில் தமிழில் சில பாடல்களே வந்துள்ளது. ஆனாலும், அவரது குரலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
1952ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆண் என்ற திரைப்படம் தமிழில் ஆண் முரட்டு அடியாள் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது. அந்த படத்தில் இடம்பெற்ற “இழந்தேன் உன்னை அன்பே” “நகரு நகரு” “பாடு சிங்கார பாடலை” “இன்று எந்தன் நெஞ்சில்” ஆகிய பாடல்களை தமிழில் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இதன்மூலம் சுதந்திரம் கிடைத்த 5 ஆண்டுகளில் தமிழில் பாடகியாக லதா மங்கேஷ்கர் அறிமுகமாகியிருந்தார்.
1955ம் ஆண்டு இந்தியில் திலீப்குமாரின் நடிப்பில் உரன் கடோலா என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும் முகமது ரஃபியுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இதேபடம், பின்னர் தமிழில் வான ரதம் என்ற பெயரில் அந்த காலத்திலே டப் செய்யப்பட்டு ரிலீசானது. அந்த படத்தில் இடம்பெற்ற கம்பதாசன் எழுதிய எந்தன் கண்ணாளன் என்ற பாடலை லதா மங்கேஷ்கர் மீண்டும் தமிழில் பாடினார். இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் நவ்ஷத் என்பவர் இசையமைத்திருந்தார்.
பின்னர் இந்தியில் மட்டும் தனது குரலால் அரசாட்சி செய்துகொண்டிருந்த லதா மங்கேஷ்கரை மீண்டும் தமிழில் அழைத்து வந்த பெருமை இசைராஜா இளையராஜாவையே சேரும். அவரது இசையில் 1987ம் ஆண்டு வெளியான “ஆனந்த்” என்ற படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு “ஆராரோ ஆராரோ” என்ற பாடலை பாடினார். நேரடி தமிழ் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுவே ஆகும்.
காலத்தாலும் அழியாத பாடல் :
பின்னர், 1988ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சத்யா”. இந்த படத்திற்காக மீண்டும் லதா மங்கேஷ்கரை இளையராஜா தமிழுக்காக அழைத்து வந்தார். மறைந்த கவிஞர் வாலியின் வரிகளில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் லதா மங்கேஷ்கர் இணைந்து “வளையோசை” என்ற பாடலை பாடியிருந்தார். லதா மங்கேஷ்கரின் குரல் இந்த பாடலை கேட்பவரை மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டியது. 1988ம் ஆண்டு வெளியான இந்த பாடல் 2கே கிட்ஸ் எனப்படும் 2000த்தில் பிறந்தவர்களுக்கும் மிகவும் விருப்பமான பாடல் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்தமான பாடல் ஆகும்.
பின்னர், அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான “என் ஜீவன் பாடுது” என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகிய “எங்கிருந்தோ அழைக்கும்” என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலாவாகவும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் அதற்கு பிறகு லதா மங்கேஷ்கர் பாடவில்லை.
ஆனால், தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்தியில் இசையமைத்திருந்த “ரங் தே பசந்தி” என்ற படத்தில் “லூகா சூப்பி” என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடியிருந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், உதித் நாராயணன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
காலத்தாலும் அழியாத அளவிற்கு காற்று முழுவதும் நிறைந்திருக்கும் அந்த இசைக்குயிலுக்கு ஏபிபி நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்..!
மேலும் படிக்க : Lata Mangeshkar Passes Away: ஓய்ந்தது இனிய குரல்! காலமானார் லதா மங்கேஷ்கர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்