Nandita Swetha: ”3 ஆண்டு வேதனை; உடலை அசைக்க முடியாது” - சமந்தாவை போல அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை நந்திதா!
நடிகை நந்திதா ஃபைப்ரோமியால்ஜியா எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Nandita Swetha: நடிகை நந்திதா ஃபைப்ரோமியால்கியா எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை நந்திதா
கர்நாடகாவைச் சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் விஜேவாக தனது பணியை தொடங்கினார். கடந்த 2008ஆம் ஆண்ட நந்திதா என்ற கன்னட படம் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். இதனை அடுத்து, தமிழில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மேலும் அவருக்கு இந்த படம் திருப்புமுனையாகவும் அமைந்தது. அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, இடம் பொருள் ஏவல், கலகலப்பு 2, தேவி 2, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு குறையவே, தெலுங்கு படங்களுக்கு தாவினார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிடிம்பா திரைப்படம் இன்று வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் ஹிடிம்பா படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை நந்திதா அளித்திருந்தார். அதில், தனக்கு ஃபைப்ரோமியால்கியா எனும் அரியவகை நோய் இருக்கிறது. இதனால் உடல் எடையில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியவகை நோய்:
மேலும், அவர் கூறியதாவது, ”இந்த ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) எனும் நோயால் உடல்சோர்வு, தசைக்கூட்டு வலி, மனநிலை மாற்றம் மற்றும் நினைவாற்றல் பிரச்சினைகள் இதன் அறிகுறிகள். என்னால் அதிக நேரம் வேலை செய்ய முடியாது. நான் என்னுடைய சாப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த நோயானது என்னுடைய வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். இந்த நோய் மெதுவாக உடல் முழுவதும் பரவி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக இதனால் அவதிப்பட்டு வருகிறேன். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய் அல்ல.
தூக்கமின்மை பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் என் உடல் எடை குறைந்துள்ளது. ஒரு சிறிய வேலை கூட செய்ய முடியாது. அப்படி செய்தால் என்னுடைய தசைகளில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் அதிக கடினமான வேலைகளையும், உடற்பயிற்சியும் செய்ய முடியாது. இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி அடுத்த படத்திற்காக உழைத்து வருகிறேன்" என்று கூறினார்.
சமீபத்தில், சமந்தாவும் இதுபோன்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவிற்கு மையோசிடிஸ் என்கிற நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்காக கடந்த ஓராண்டு காலமாக ஹைபர்பாரிக் என்கிற கடுமையான சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார் சமந்தா. உணவுமுறையில் மாற்றங்கள், ஐஸ் பக்கெட்டில் இருப்பது, ஆக்ஸிஜன் சேம்பரில் இருப்பது என பல்வேறு சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருகிறார் சமந்தா.