Kathar Basha Endra Muthuramalingam: முத்தையாவின் ட்ரேட் மார்க் கிராமத்துக் கதை... பாக்ஸ் ஆஃபிஸில் சாதித்ததா காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்!
வழக்கமான முத்தையா முத்திரையுடன், தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடனும் பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் நடைபெறும் சண்டையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் நேற்று திரையரங்குகளில் வெளியானது. விருமன் படத்துக்குப் பிறகு இயக்குநர் முத்தையா நடிகர் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
பிரபு, சித்தி இத்னானி, பாக்யராஜ், ஆடுகளம் நரேன், தமிழ், விஜி சந்திரசேகர், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
வழக்கமான முத்தையா முத்திரையுடன், தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடனும் பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் நடைபெறும் சண்டையை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள், இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இப்படம் முதல் நாள் 80 லட்சங்களை வசூலித்துள்ளதாகவும், இரண்டாம் நாளான இன்று 1.47 கோடிகள் வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை வாரவிடுமுறையை ஒட்டி வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, வழக்கமான முத்தையா படங்களைப் போல் சாதீயக் குறியீடுகளைத் தாண்டி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். எனினும் ஆக்ஷன் தாண்டி நடிகர் ஆர்யாவின் நடிப்பு விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஆர்யாவின் 34ஆவது படமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உருவாகியுள்ள நிலையில், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தன்னுடைய ஸ்பெஷாலிட்டியான கிராமத்து கதைப் பின்னணியையே முத்தையா தொடர்ந்து வரும் நிலையில், அவரது எட்டாவது படமாக இப்படம் உருவாகியுள்ளது.
கொம்பன் படத்துக்கு பிறகு ராமநாதபுரம் களத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் யார் மனதையும் புண்படுத்தும் படி இருக்காது என முன்னதாக முத்தையா பேசி இருந்தார். மேலும், எப்போதும் போல மண்மணம் மாறாமல் இக்கதையை சொல்லி உள்ளதாகவும், நகரத்துக் கதை செய்ய தனக்கு ஆசை இருப்பதாகவும் விரைவில் அதை செய்வதாகவும் கூறி இருந்தார்.
மேலும் சிட்டி பையனாகவே பார்த்து பழக்கப்பட்ட ஆர்யா இப்படத்தில் முதன்முதலாக கிராமத்துக் கதைக்களத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், "முத்தையா போன்ற இயக்குநர் படங்களில் நடிக்க தனக்கு மிகவும் பிடிக்கும், உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர், இப்படத்தில் நான் நடித்ததை எனது அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன்" என ஆர்யா பேசியிருந்தார். இப்படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.