Kantara OTT Release: வழக்கை வென்றுவிட்டோம்.. மீண்டும் வருகிறது வராஹ ரூபம் பாடல்..ரிஷப் ஷெட்டி ட்வீட்!
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் காந்தாரா வெளியானது. ஆனால் ஓடிடி தளத்தில் படம் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காந்தாரா படத்தில் இருந்து நீக்கப்பட்ட வராஹரூபம் பாடல் மீண்டும் சேர்க்கப்படும் என அப்படத்தின் நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிலையில் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்தது. காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
இதன் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா வெளியானது. மேலும் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் தொடங்கி ஒட்டுமொத்த திரையுலகமே இப்படத்தை கொண்டாடியது. படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில் நில அரசியலை துல்லியமாக இப்படம் காட்டுவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 50 நாட்களை கடந்த நிலையில் காந்தாரா படம் ரூ.400 கோடி வசூல் செய்தது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் காந்தாரா வெளியானது. ஆனால் ஓடிடி தளத்தில் படம் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் முன்னதாக படத்தில் இடம்பெற்ற படத்தில் வராஹ ரூபம் பாடல் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட நவரசம் பாடலின் காப்பி தான் என கூறி தைக்குடம் பிரிட்ஜ் பேண்ட் குழுவினர் கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், தியேட்டர்களில் பாடலை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தனர். இதனால் இப்பாடல் அமேசான் பிரைமில் இடம் பெறாமல் இருந்தது. இதற்கிடையில் பாடல் காப்பி அடிக்கப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தாய்க்குடம் பிரிட்ஜ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் சில நாட்களுக்கு முன் அந்த தடை நீக்கப்பட்டது.
ஒரு பக்கம் தடை நீக்கப்பட்டாலும், வராஹரூபம் பாடல் படத்தில் இருந்தது போல தளங்களில் இடம் பெறவில்லை. காரணம் பாடலின் பின்னணி இசை மாற்றியமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பாடலை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ದೈವಾನು ದೈವಗಳ ಆಶೀರ್ವಾದ ಹಾಗು ಜನರ ಅಭಿಮಾನದಿಂದ ವರಾಹರೂಪಂ ಕೇಸ್ ಗೆದ್ದಿದ್ದೇವೆ. ಜನರ ಕೋರಿಕೆಯನ್ನು ಪರಿಗಣಿಸಿ ಅತಿ ಶೀಘ್ರದಲ್ಲಿ OTT platform ನಲ್ಲಿ ಹಾಡನ್ನು ಬದಲಾಯಿಸಲಿದ್ದೇವೆ . @VKiragandur@ChaluveG @AJANEESHB @Karthik1423 @hombalefilms @KantaraFilmhttps://t.co/STsNEyKmuT
— Rishab Shetty (@shetty_rishab) December 3, 2022
இந்நிலையில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி வராஹரூபம் பாடல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெய்வங்கள் ஆசீர்வாதம் மற்றும் மக்களின் அபிமானத்தால் வராஹரூபம் பாடலுக்கான வழக்கில் வென்றோம். மிக விரைவில் மக்களின் கோரிக்கையை ஏற்று OTT தளத்தில் பாடல் சேர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.