Rishab Shetty: காந்தாரா கதாநாயகன்... யார் இந்த ரிஷப் ஷெட்டி? வேலை செய்ததா பெயர் மாற்றம்?
கடந்த 2017 ஆம் ஆண்டு ஐடி பட்டதாரியான பிரகதி ஷெட்டியை திருமணம் செய்து கொண்ட ரிஷப் ஷெட்டிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கொண்டாட்டம் அடங்கி, கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து, தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட ‘காந்தாரா’ படத்தின் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. மொழிகள் தாண்டி இந்தப்படத்தை இப்படி கொண்டாட வைத்திருப்பதில் ரிஷப் ஷெட்டியின் பங்கு மிக முக்கியமானது. காரணம், படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது மிரட்டலான நடிப்பினால் படத்தில் வரும் காவல் தெய்வத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
கன்னட மாநிலம் குண்டபுறத்தை பிறப்பிடமாக கொண்ட ரிஷப் ஷெட்டி பெங்களூரில் உள்ள அரசு திரைப்படக்கல்லூரியில் டிப்ளமோ படித்தவர். எம்.பி.ஏ பட்டதாரியான இவரின் இயற்பெயர் பிரசாந்த் ஷெட்டி. இந்த மாற்றத்தை செய்தவர் அவரது தந்தையும் பிரபல ஜோசியருமான பாஸ்கர் ஷெட்டி. இயல்பில் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாலும், தோற்றத்தின் மீது கொண்ட தாழ்வு மனப்பான்மையால் நடிக்காமல் டைரக்சன் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் உருவான ‘சையனைடு’ படத்தில் பணியாற்றிய ரிஷப் கன்னட தொலைக்காட்சி இயக்குநர் அரவிந்த் கெளசிக்கிடம் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து அவரது இயக்கத்தில் நடிகர் ரக்ஷித் நடிப்பில் உருவான ‘துக்ளக்’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி, தொடர்ந்து ரக்ஷித்தை வைத்து ‘ரிக்கி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்து இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் வெளியான லூசியா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ரிஷப், ரக்ஷித்ஷெட்டி எழுதி இயக்கி இருந்த 'உளிடவரு கண்டந்தே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து ரக்ஷித் ஷெட்டி எழுதிய கிரிக் பார்ட்டி படத்தை இயக்கினார்.
2018 ஆம் ஆண்டு இவர் இயக்கிய சர்காரி ஹாய். ப்ரா. ஷாலே காசர்கோடு படத்திற்கு சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பெல் பாட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
View this post on Instagram
இந்தப்படத்தின் இராண்டாம் பாகத்தையும் உருவாக்கவும் திட்டம் இருப்பதாக கூறும் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா தற்போது காந்தம் போல ரசிகர்கள் அனைவரையும் திரையரங்கிற்குள் இழுத்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐடி பட்டதாரியான பிரகதி ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.