The Kerala Story: "படத்தை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் தான் தீவிரவாதி.." 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கங்கனா ரனாவத் ஆதரவு
தி கேரளா ஸ்டோரி படம் உங்களை தாக்குவதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில் பல எதிர்ப்புகளை தாண்டி நேற்று திரையரங்குகளில் வெளியானது 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்திற்கு கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
தி கேரளா ஸ்டோரி:
தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரைலர் வெளியான நாள் முதல் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்க்க போவதாக காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்று இருந்தன. அதனால் அந்த சமயத்திலேயே இப்படத்துக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் கேரள அரசு தடை விதிக்க மறுத்ததால் நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை நாடு முழுவதும் பெற்ற இப்படம் 10 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
நீங்கள் தான் தீவிரவாதி:
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தாலும் பலரும் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் 'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் " இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி" என தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கனா. கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களுக்கு குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.