Kangana Ranaut Corona: கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டேன் - கங்கான ரனாவத்
ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி எனக் கூறிய அவர், கொரோனாவை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பது குறித்து கூற நிறைய உள்ளதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அதில் இருந்து மீண்டு விட்டதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றால் திரைப்பட பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் கங்கனா ரனாவத்துக்கு கடந்த மே 8ஆம் தேதி கொரோனா தொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா இந்த தகவலை கூறியிருந்தார்.
அத்துடன் கங்கனா, "இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். அனைவரும் வாருங்கள் இந்த கொரோனாவை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஹர ஹர மகாதேவ்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று குறித்து கங்கனா ரனாவத் கூறிய கருத்து அபத்தமாக இருப்பதாக ஃபாலோவர்கள் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப அவரது பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. உலகையே அதிரவைத்திருக்கும் கொரோனா தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று குறிப்பிட்டிருந்ததால் அவரின் பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, கங்கனா இன்னொரு பதிவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் "கொரோனாவை அழிப்பேன் என்று நான் அச்சுறுத்திய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. டுவிட்டரில் தீவிரவாதிகளும், கம்யூனிஸ ஆதரவாளர்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது கொரோனா ரசிகர் மன்றமா. அற்புதம். நான் இன்ஸ்டாவுக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளன. இங்கு இன்னும் ஒருவாரம் கூட தாங்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் கங்கனா பதிவிட்டார்.
இந்நிலையில், கங்கனா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி எனக் கூறிய அவர், கொரோனாவை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதை குறித்து கூற நிறைய உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கொரோனா தொற்றை மரியாதை குறைவாக பேசினால் சிலர் புண்படுகிறார்கள் எனவும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
கொரோனா குறித்து கிண்டலாகவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கங்கனா ரனாவத் குணமடைந்த பிறகும், மீண்டும் அதை கிண்டலாகவே பதிவிட்டுள்ளார்.