(Source: ECI/ABP News/ABP Majha)
Kamalhassan on Crazy Mohan: 'இடைவேளை விட்டதுபோல் போய்விட்டார்' : கிரேஸி மோகன் பற்றி கமல் உருக்கம்..
Kamalhassan on Crazy Mohan: பன்முக கலைஞர் கிரேஸி மோகன் நினைவு தினமான இன்று நண்பனை நினைத்து உருக்கமான போஸ்ட் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக நாடக கலைஞர், நாடக இயக்குநர், ஆசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா, நகைச்சுவை நடிகர் என பன்முகம் கொண்ட திறமையாளராக விளங்கியவர் ஈடு இணையில்லா கலைஞர் கிரேஸி மோகன். சிரிப்பலைகள் மூலம் ஆட்டிப்படைத்த ஒரு மகா கலைஞன் இந்த உலகை விட்டு பிரிந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நண்பரும் நடிகருமான உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான பதிவையும் போஸ்ட் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கும், கிரேஸி மோகனுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான நட்பு தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்று தான். அதற்கு சாட்சி தான் இருவரின் காம்போவிலும் வெளியான ஏராளமான எவர்கிரீன் நகைச்சுவை திரைப்படங்கள்.
கிரேஸி மோகன் கடந்த 2019-ஆம் ஆண்டு மாரடைப்பு காணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பில் வாடும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "எடுத்த வேலையை தனித்த தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறன் எனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம். இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன" என பதிவிட்டுள்ளார்.
எடுத்த வேலையை தனித்த தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறனெனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம். இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2024
கமல்ஹாசன் - கிரேஸி மோகன் இருவரும் சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். 1989-ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படம் தான் அவர்களின் காம்போவில் வெளியான முதல் திரைப்படம். அதை தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என அடுத்தடுத்த படங்களில் அவர்களின் மேஜிக் களைகட்டியது.
இந்த ஜோடிகள் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடப்பட்டனர். வேறு பல இயக்குநர்களின் படங்களுக்கு பணியாற்றி இருந்தாலும் சினிமா உலகத்தில் அவர் புகழ் பெற்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என நன்றி உணர்வுடன் கடைசி பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார்.
திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை கடந்தும் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்து விளங்கியதற்காக கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.