“பராசக்தி பார்த்த பின் நடந்த விஷயத்தால் அவமானப்பட்டேன்” - உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் பராசக்தி பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் பார்த்த பிறகு நடந்த சம்பவத்தால் அவமானப்பட்டதாக நிகழ்வு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
பராசக்தி படம்
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ரவி மோகன், அதர்வா முரளி, சேத்தன், பைசல் ஜோசப், ராணா டகுபதி, பிரித்வி ராஜன் என பலரும் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படம் இந்தி மொழித்திணிப்பு போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த படம் வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால் பட வசூல் கடுமையாக சரிந்தது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களை விமர்சிக்க கடும் கருத்து மோதல் உண்டானது. அதேசமயம் இயக்குநர் சுதா கொங்காரா தொடங்கி படக்குழுவைச் சேர்ந்த சிலர் விஜய் ரசிகர்களை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தனர்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பராசக்தி படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியதாக வெற்றி கொண்டாட்டமும் நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில் பராசக்தி படம் பிப்ரவரி முதல் வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “என் மகனுடன் நான் பராசக்தி படத்துக்கு சென்றிருந்தேன். அந்த படம் பார்த்த பிறகு வெளியே வந்து என் மகனிடம், ‘ஏன்பா தமிழ்நாட்டில் மொழி போராட்டம் ஒன்று நடந்ததே.. தெரியுமா?’ என கேட்டேன். அவன் எனக்கு தெரியாது என சொன்னான். அதைக்கேட்டு நான் ரொம்ப அவமானப்பட்டேன். என் கடமையில் இருந்து தவறியதாக என்னை கருதிக் கொண்டேன். அந்த மொழிப் போராட்ட வரலாறு கட்டாயம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
ஏன் இந்த தருணத்தில் தெரிய வேண்டும் என சொல்வதற்கு காரணம் சொல்கிறேன். ஆங்கிலம் தெரியாமல் தமிழகத்தை தாண்ட முடியாது. என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். தமிழன் மற்ற மொழிகளை எதிர்க்கவும் இல்லை. அவன் விரும்பி படிக்கவும் செய்கிறான். என் மொழியின் தொன்மை, மொழி செருக்கு காரணமாக மற்றவர்கள் என்மீது மொழியை திணித்தால் என்றுமே ஏற்க மாட்டேன். மொழிக்கு இழுக்கு வரும்போது நம் குரல் உயர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















