சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விதிமுறைகளை மீறி 40 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வழுதலைக்குடி கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, மண் குவாரிக்கு உடனடித் தடை விதிக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தீவிர சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த சீர்காழி வட்டாட்சியரைப் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நிலத்தடி நீர் பாதிப்பு - பொதுமக்கள் வேதனை
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள வழுதலைக்குடி கிராமத்தில் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் இயங்கி மணல் அள்ளப்பட்டதால், கிராமத்தைச் சுற்றியுள்ள நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. மேலும், நன்னீர் உவர்நீராக மாறியதன் காரணமாகப் பயிர்கள் கருகி, விவசாயம் செய்ய முடியாத அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது குடியிருப்புப் பகுதிக்கும் விளைநிலங்களுக்கும் மிக அருகாமையில் மற்றொரு தனியார் மணல் குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் விதிமுறைகளை முற்றிலும் மீறி 40 அடிக்கும் அதிகமான ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கையில்லை
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாழ்பட்டது மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மண் எடுத்ததால் ஏற்பட்டுள்ள ஆழமான குழிகளில் நீர் தேங்கி நிற்பதால், கிராம மக்களின் கால்நடைகள் அதில் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்தும், மணல் குவாரிக்கு உடனடியாகத் தடை விதிக்கக் கோரியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தனர். இருப்பினும், மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
"ஏற்கனவே 10 குவாரிகளால் எங்கள் ஊர் குடிநீரும் விவசாயமும் பாழாகிவிட்டது. இப்போது 40 அடிக்கு மண் எடுப்பதால் கால்நடைகளும் உயிரை இழக்கின்றன. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை." என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு & வட்டாட்சியர் முற்றுகை
அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சீர்காழி - திருமுல்லைவாசல் பிரதான சாலையில் ஒன்றுதிரண்டு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பாதையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சீர்காழி - திருமுல்லைவாசல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகளின் சமாதான வார்த்தைகளில் திருப்தியடையாத கிராமத்துப் பெண்கள், வட்டாட்சியரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வரக் கோரிக்கை
"எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? குவாரியை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்" எனக்கூறி வட்டாட்சியரிடம் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் நேரடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து குவாரியை மூட உத்தரவிடும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழுதலைக்குடி பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் மணல் குவாரிக்கு நேரில் ஆய்வு செய்து குவாரியை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















