SS Rajamouli | யாரா இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும்.. பாகுபலி இயக்குநரின் ஐடி கார்டு ஐடியா!
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்.டி.ஆர் பகிர்ந்துள்ளார். அதில் அனைவரும் ஐடி கார்டு அணிந்து நிற்கின்றனர்.
பாகுபலி வெற்றிப்படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம்தான் 'ஆர்.ஆர்.ஆர்' . ரத்தம் , ரணம், ரௌத்திரம் என்பதே இந்த படத்தின் முழுமையான பெயர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் கதாநாயகன்களாக நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர அலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி, ஸ்ரியா சரண் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். 1920 ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்.டி.ஆர் பகிர்ந்துள்ளார். அதில் அனைவரும் ஐடி கார்டு அணிந்து நிற்கின்றனர். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வயது கடந்தாலும் நான் இன்னும் ஐடி கார்டு அணிந்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் ஐடி கார்டு எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஐடி கார்டில் அவர் மிகவும் இளமையாகவும், மெலிந்தும் இருக்கிறார். அருகே இயக்குநர் ராஜமௌலி தன் ஐடி கார்டை கேமராவுக்கு காண்பிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் படத்திற்கு தொடர்பில்லாதவர்கள் வந்து போவதை தடுப்பதற்காக இந்த ஐடி கார்டு வழக்கத்தி ராஜமெளலி கொண்டு வந்துள்ளார். படப்பிடிப்புக்கு தொடர்பில்லாதவர்கள் ஷூட்டிங்கின் போது வருவதால் பல காட்சிகள் இணையத்தில் கசிந்துவிடுகின்றன. அதனை தடுக்கும் விதமாக இந்த ஐடி கார்டு ஐடியா கொண்டுவரப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் ராம் சரண் எடுத்த புகைப்படம் வைரலானது. படப்பிடிப்புக்காக உக்ரைன் செல்லும் போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
முன்னதாக கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என பேசப்பட்டு வந்த நிலையில், படம் திட்டமிட்டபடி வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது லைகா. திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த படம் , வெளியான குறிப்பிட்ட சில கால இடைவெளிகளில் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கும் , மற்ற மொழிகளின் ஒடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 ஓடிடி தளத்திற்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை தமிழில் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. அதேபோல தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கான உரிமையை ஸ்டார் தொலைகாட்சியும், இந்தியில் ஜீ சினிமாவும், மலையாளத்தின் உரிமையை ஏசியாநெட்டும் பெற்றுள்ளன. படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் போஸ்ட்ப்ரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு, படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்குவார்கள் என தெரிகிறது.