Jayam Ravi: காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் ஓவர்.. இந்த வருடமாவது ஜெயம் ரவிக்கு வெற்றி கிடைக்குமா?
Kadhalikka Neramillai Shoot wrapped : கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு முடிவடைந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வெற்றி படங்களின் நாயகனாக ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன், இறைவன், சைரன் என அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகின. ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கேவ்மிக் ஆரி மேற்கொள்ள லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். M. செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை இணை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டது என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். கிருத்திகா உதயநிதி கேக் வெட்டுவதும் அதை ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனுக்கு ஊட்டிவிடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
படத்தின் ஆடியோ லான்ச், டீசர் ரிலீஸ் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதலிக்க நேரமில்லை படத்தை தொடர்ந்து ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிகின்றன.
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான 'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் 2022ம் ஆண்டு வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாக வைத்து ரொமான்டிக் படமாக 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் உருவாகியுள்ளது என்பது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறியப்படுகிறது. மீண்டும் ஜெயம் ரவியை ஒரு ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக அசத்திய ஜெயம் ரவிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவருக்கு இந்தாண்டாவது எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.