மத உணர்வுகளை புண்படுத்தியதா ஜனநாயகன் ? கடவுள் பற்றி எச் வினோத் சொன்னதை பாருங்க
JanaNayagan : தனது கடைசி படத்தை இயக்க விஜய் எச் வினோத்திற்கு வாய்ப்பளித்த முக்கிய காரணங்களில் ஒன்று சமூக அரசியல் சூழல் மீது இயக்குநர் எச் வினோத்திற்கு இருக்கும் தெளிவான பார்வையே

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பாக சென்சார் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம். நிலைமை இப்படி இருக்க மதம் மற்றும் கடவுள் பற்றி ஜனநாயகன் பட இயக்குநர் எச் வினோத் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் ரிலீஸில் தாமதம் ?
விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை எச் வினோத் தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ ,பாபி தியோல் மற்றும் பல்வேறு நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் வெளியாகும் படம் என்பதால் இப்படம் பல தரப்புகளிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி படக்குழுவுக்கு பரிந்துரைத்தது. தணிக்கை குழுவின் பரிந்துரைப்படி திருத்தங்கள் செய்தும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து மறுதணிக்கைக்கு அனுப்பியது தணிக்கை குழு. இதனால் படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அவசர வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
கடவுள் பற்றி எச் வினோத்
மத ரீதியான உணர்ச்சிகளை புண்படுத்துவதாக படத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு ஒரு திட்டமிட்ட சதி என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படத்தின் இயக்குநர் எச் வினோத் கடவுள் குறித்தும் மதம் பற்றியும் பேசியுள்ள வீடியோ ஒன்றையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோவில் " கடவுள் இருக்கா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் போகவில்லை. எனக்கு கடவுள் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் எனக்கு கடவுள் வேண்டும். கடவுள் இல்லாமல் வாழ்வதற்கு ஒரு பெரிய தைரியமும் தெளிவும் வேண்டும். அந்த தெளிவும் தைரியமும் எனக்கு இல்லை. என்னுடைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர எனக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். நான் கடவுளை கும்பிடுவதன் வழியாக வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. கடவுளை வைத்து வியாபாரம் பண்ணும் போது கடவுளை வைத்து அதிகாரத்திற்கு செல்ல நினைக்கையில் தான் கடவுள் பிரச்சனையாக மாறுகிறார். என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது கணக்கு பாடத்தில் வரும் ஒரு எக்ஸ் போல்தான். ஒரு கணக்கிற்கான விடையை கண்டுபிடிக்க எக்ஸ் என்கிற ஒரு காரணியை பயண்படுத்துவோம் இல்லையா. அந்த மாதிரிதான் எனக்கு கடவுள்" என கூறியுள்ளார். இவ்வளவு தெளிவாக பேசும் ஒருவர் எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் மாதிரி படமெடுக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் .





















