Jana Nayagan: ஜனநாயகன் டிக்கெட் கட்டணம்.. பிளாக்கில் வாங்கியவர்கள் புலம்பல்.. திரும்ப கிடைக்குமா?
ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு டிக்கெட் விலை ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்கியவர்கள் பணம் திரும்ப கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் புலம்பி தவித்து வருகின்றனர்.
ஜனநாயகன் படம்
நடிகர் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசிப் படமாக, அவரின் 69வது படமாக உருவாகியுள்ளது “ஜனநாயகன்”. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், மதன் கௌரி, ரெபோ மோனிகா ஜான் போன்றோரும் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் முதலில் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தணிக்கை சான்றிதழ் சிக்கல்
இந்த நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வரை எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும் விஜயின் கடைசிப் படம் என்பதால் அவருக்கு சிறப்பான பிரியாவிடை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம், கேவிஎன் நிறுவனம் என இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனநாயகன் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்ட 9ம் தேதி காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இதனால் பட ரிலீஸில் சிக்கல் ஏற்படலாம் என கருதி ஜனநாயகன் படத்தை படக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்
இந்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. புக் மை ஷோ, டிக்கெட் நியூ, டிஸ்ட்ரிக் செயலி மூலமாக டிக்கெட் பெற்றவர்களுக்கு அந்த பணம் முழுவதுமாக செலுத்தப்படுகிறது. அதேசமயம் தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் பெற்றவர்களுக்கு அந்த கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது.
ஆனால் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு டிக்கெட் விலை ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டு பலரும் லாபம் பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேசமயம் தென் மாவட்டங்களில் ரூ.200 மதிப்புள்ள ஒரு டிக்கெட் ரூ.1,000 வரை விற்கப்பட்டிருக்கிறது. ஆசையாக முதல் காட்சி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டது போல பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. பிளாக்கில் டிக்கெட் பெற்றவர்கள் மீண்டும் அந்த பணத்தை திரும்ப கேட்டு சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பல பேர் போன் எடுக்கவில்லை எனவும், இதனால் பணத்தை இழந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.





















