Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch TVK Vijay: அடுத்த 30 ஆண்டுகளுக்கு மக்களுடன் நிற்கப்போவதாக, ஜனநயாகன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

Jana Nayagan Audio Launch TVK Vijay: வரும் 2026ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார் என்ற விமர்சனங்களுக்கு, தவெக தலைவர் விஜய் பதிலடி தந்துள்ளார்.
சினிமாவை விட்டு விலகும் விஜய்:
வசூல் அடிப்படையில் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நிலையை எட்டியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக ஜனநாயகன் படமே தனது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்றும் அறிவித்தார். அதேநேரம், விஜயால் அரசியலால் சாதிக்க முடியாது, சிரஞ்சீவி போன்ற மற்ற நடிகர்களைப் போலவே அரசியலில் தோற்றதும் மீண்டும் சினிமாவிற்கே சென்று நடிக்க ஆரம்பித்து விடுவார் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சிக்க தொடங்கினார். ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயின் ஓய்வு தொடர்பாக பேசியதும் பல சந்தேகங்களை எழுப்பியது. அதாவது படப்பிடிப்பின்போது நீங்கள் மீண்டும் நடிப்பீர்களா என அவர் கேட்டதாகவும், அதற்கு 2026 தேர்தலுக்கு பிறகு தான் தெரியும் என விஜய் சொன்னதாகவும் மமிதா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். இதனை கொண்டும் பலரும் விஜயை விமர்சிக்க தொடங்கினர்..
விஜய் மீது அரசியல் தாக்குதல்:
தேர்தலில் தோற்றால் விஜய் மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார் என்ற விமர்சனம் மூலம், அவர் நிலையற்றவர், நம்பகத்தன்மையற்ற தலைவர், அவருக்கு வாக்களிப்பது எந்தவித பயனுமற்றது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயன்றனர். ஆனாலும், இதுபோன்ற விமர்சனங்களுக்கு விஜய் நேரடியாக எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து, வருவேன் என கூறி ஏமாற்றம் அளித்ததை போல, விஜயும் பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவாரோ? என்ற சந்தேகம் பொதுமக்களிடமும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் தான், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், தனது அரசியல் பயணத்திற்கான திட்டத்தை விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.
”30 ஆண்டுகள் இதுதான் ப்ளான்”
நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எனது திரைப்பட வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே நான் எல்லா வகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். ஒரு சிறிய மணல் வீட்டை கட்ட விரும்பினேன். ஆனால், ரசிகர்கள் எனக்கு அரண்மனையை கொடுத்தனர். 33 ஆண்டுகளாக ஆதரவாக இருப்பது எளிதல்ல, ஆனால் என் ரசிகர்கள் அதை எனக்குச் செய்தார்கள். அதுவே எனது மிகப்பெரிய பலம். அதற்காக நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அவர்கள் எனக்காக நின்றார்கள். அவர்களுக்காக அடுத்த 30-33 வருடங்களுக்கு நிற்க போறேன், வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும் அவர்களுடன் இருக்கப்போகிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காக, சினிமாவிலிருந்து விலகுகிறேன்” என உணர்ச்சிப்பொங்க பேச அந்த ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்தது. இதன் மூலம் வெற்றி தோல்வியை தாண்டி இனி முழு நேரமும் அரசியல் பயணத்தை மேற்கொள்ளப்போவதை உறுதி செய்து, விமர்சனங்களுக்கு விஜய் பதிலடி தந்துள்ளார்.




















