James Vasanthan on Narendra Modi: பிரிவினையை வைத்து அரசியல் செய்யும் மோடி நாட்டின் விரோதி... கடுமையாக சாடிய ஜேம்ஸ் வசந்தன்
இந்த நாட்டின் ஒற்றுமையை கெடுத்த அனைவரையும் நாட்டின் விரோதிகளாக பார்க்கிறேன். ஊழல் இல்லாத நாட்டை மோடி கொடுப்பார் என எண்ணி தான் அவருக்கு ஓட்டு போட்டு தப்புக்கு உடந்தையாக இருந்துவிட்டேன்.
தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளராக இருந்து இசையமைப்பாளர் பரிமாணத்தை எடுத்தவர் ஜேம்ஸ் வசந்தன். அவ்வப்போது ஏதாவது ஒரு விமர்சனத்தை முன் வைத்து அது குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதில் பிரபலமாகி வருகிறார்.
பிரிவினையை ஏற்படுத்தியவர் :
அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார். சமீப காலமாக நீங்கள் மோடி போன்ற வலது சாரியினரை கடுமையாக சாடுகிறீர்களே ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "நான் அப்படி நினைக்கவே இல்லை. இந்த நாட்டின் ஒற்றுமையை கெடுத்த அனைவரையும் நாட்டின் விரோதிகளாக பார்க்கிறேன். பிரிவினையை வைத்து தானே மோடி அரசியல் செய்து வருகிறார். என்னுடன் 35 ஆண்டுகளாக பழகிய நண்பன் எல்லாம் போடா நீயெல்லாம் வெளிநாட்டு மதம் என என்னை பார்த்து சொல்கிறான். இந்த வார்த்தையை கற்று கொடுத்தது மோடி தானே. மதத்தின் அடிப்படையில் அனைத்தையும் அவர் பிரிந்துவிட்டார். எல்லா இடங்களிலும் மதத்தின் அடிப்படையில் தானே மனிதர்களை பார்க்கிறார்கள். இந்த விரோதத்தை வைத்து தானே மோடி ஆட்சி செய்து வருகிறார் என்பது அவருக்கு ஓட்டு போடாதவர்கள் மட்டுமல்ல ஒட்டு போட்டவர்களுக்கும் நன்றாக தெரியும். இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக தானே இருந்தோம். இந்த பிரிவினையை உண்டாக்கி நம்மை பிரித்தது யார்" என மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.
நானும் தப்புக்கு உடந்தை :
ஊழல் இல்லாத நாட்டை மோடி கொடுப்பார் என எண்ணி தான் நான் அவருக்கு ஓட்டு போட்டேன். அதற்கு பிறகு தான் அந்த ஆபத்தான குரூப் பற்றி தெரிந்து மிகவும் வருத்தப்பட்டேன். நான் அந்த தப்புக்கு உடந்தையாக இருந்தேன் என்பதில் எனக்கும் வருத்தம் தான். ஜாதி மத அடிப்படையில் மக்களை பிரித்து விட்டார்கள். இனிமேல் அவர்கள் ஒன்று சேர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் பேசியிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.
அசிங்கங்களை பற்றின விவாதங்கள் :
இன்று சோசியல் மீடியா, தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் அனைத்திலும் சாதி, மதம், ஒருவரை பற்றி ஒருவர் விமர்சித்து கொள்வது என இந்த அசிங்கங்கள் தானே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற விவாதங்கள் அனைத்தும் முன்னர் நடைபெற்றதில்லையே. இது தான் எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. நான் என்றுமே ஆட்களுக்கு எதிரானவன் அல்ல கோட்பாடுகளுக்கு தான் எதிரானவன். அது யாராக இருந்தாலும் அது தான் என்னுடைய கருத்து. ஒரு நாடு என்றால் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தானே இருக்க வேண்டும். தனக்கு லாபம், அதிகாரம் ஆட்சி கிடைக்கும் என்பதற்காக மக்களை பிரித்து விளையாடுகிறார்கள் என்றால் அவர்களை போன்ற ஒரு விரோதி நாட்டுக்கு வேறு யாராக இருக்க முடியும். மோடி என்பதால் மட்டுமல்ல அவருக்கு அடுத்து யார் அந்த இடத்திற்கு வந்தாலும் அவர்களை பற்றியும் நான் விமர்சனம் கூறுவேன் என பேசியிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.