James vasanthan on Anirudh : அனிருத் இசை பிரியாணி மாதிரி... தினமும் சாப்பிட்டா சலித்து போகாதா? - இன்றைய இசை குறித்து ஜேம்ஸ் வசந்தன்
வெறும் துள்ளலாக மட்டுமே பாடல்களை எத்தனை நாளுக்கு தான் கேட்க முடியும். பிரியாணியை மூன்று வேளையும் எத்தனை நாளைக்கு தான் சாப்பிட முடியும். அப்பப்ப கொடுத்தால் தானே நன்றாக இருக்கும்.
பிரபலமான தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானர். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அனைவரையும் முமுணுக்கவைக்கும் பாடல்களாக அமைந்தன. அதிலும் கண்கள் இரண்டால் பாடல் இன்றும் அனைவரின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது.
இளையராஜா டூ அனிருத் :
ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி அது குறித்த விவாதங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். அதிலும் குறிப்பாக இளையராஜாவை அவ்வப்போது டார்கெட் செய்து ஏதாவது ஒரு குறை சொல்லி கொண்டே இருப்பார். இளையராஜாவை தொடர்ந்து தற்போது அவர் குறை கூறி இருப்பது அனிருத்தை.
இமானை பாராட்டிய ஜேம்ஸ் :
பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் இமான் மற்றும் அனிருத் இசை பற்றி விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். அன்றைய மெலடி ஹிட்ஸ் போல இந்த காலத்தில் எங்கு பாடல்கள் வருகின்றன. இமான் ஒரு நல்ல இசையமைப்பாளர். துள்ளலான பாடல்களை கொடுத்தாலும் பல ஹிட்டான மெலடி பாடல்களையும் இன்றைய காலகட்டத்தில் கொடுத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அவர் மட்டுமே. அன்றைய இசையை போல இனிமையான டூயட், தனி பாடல்களை இந்த தலைமுறைக்கு கொடுக்கும் ஒரே இசையமைப்பாளராக இமான் இருந்து வருகிறார் என பாராட்டி தள்ளினார் ஜேம்ஸ் வசந்தன்.
ராக் மட்டும் போதாது:
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்புவதால் தான் அனிருத் பாடல்களை அதிரடியாக கொடுக்கிறார். அந்த காலத்தில் இருந்தே இது தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது. என் ரசிகர்கள் அதை தான் விரும்புகிறார்கள் என அனிருத் நினைத்தால் அவர் சின்ன பையன் அப்படி தான் இசை போடுவார். நீங்கள் அதை பாராட்டினால் அவர் ஏன் அவருடைய ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும். அது அப்படியே தான் தொடரும். ஆனால் இவர்களின் இந்த போக்கில் மெலடி பாடல்கள் என்பது காணாமல் போய்விட்டது என அனிருத் இசை குறித்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.