Vani Jairam: பத்ம பூஷண் விருது அறிவிப்பு ... மத்திய அரசுக்கு பாட்டு பாடி நன்றி சொன்ன வாணி ஜெயராம்..!
பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி வாணி ஜெயராம் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி வாணி ஜெயராம் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய மிக உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்று மூன்று பெயர்களில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்ட கல்வி, சமூக சேவை, பொதுநிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு போன்ற பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாடகி வாணி ஜெயராம் பத்ம விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.#PadmaAwards @PMOIndia @narendramodi @AmitShah @PIBHomeAffairs @PadmaAwards @ianuragthakur @Murugan_MoS @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive @MinOfCultureGoI @kalakshetrafdn pic.twitter.com/nqxHzruOIB
— PIB in Tamil Nadu (@pibchennai) January 30, 2023
அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுகள் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பிறந்த வாணி ஜெயராமின் குடும்பம் இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்கது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்ற வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரின் பாடல்களைக் கேட்டு திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த அவரது கணவர் ஜெயராம், வாணி உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தார்.
1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான அவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தான் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாணி ஜெயராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீர்க்க சுமங்கலி படத்தில் இடம் பெற்ற “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலை பாடியுள்ளார். மேலும் “இந்த வருடம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது மிக மிக சந்தோஷம் அடைந்தேன். 52 வருடங்களாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கு என்னுடைய பாடல்களை கேட்டு ரசித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த விருதை அளித்து என்னை கௌரவப்படுத்திய மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியையும் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என வாணி ஜெயராம் கூறியுள்ளார்.