Ilayaraja Biopic: படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு.. இசைஞானியாக தனுஷ்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
Dhanush in Ilayaraja Biopic: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
![Ilayaraja Biopic: படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு.. இசைஞானியாக தனுஷ்? உற்சாகத்தில் ரசிகர்கள்! Ilayaraja Biopic Dhanush to do Maestro Ilaiyaraaja Biopic Shooting to Start 2024 Latest Cinema News Ilayaraja Biopic: படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு.. இசைஞானியாக தனுஷ்? உற்சாகத்தில் ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/52911c75874ef8f426e8d15ec06caa3d1698742896301574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இளையராஜாவின் பயோபிக் (Ilayaraja Biopic)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக விளங்குபவர் இசையமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் தொடங்கி கோலிவுட்டில் 1970களில் நுழைந்து, தமிழ் சினிமா தாண்டி, இசை ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இன்று வரை ராஜ்ஜியம் நடத்தி வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா.
சினிமா துறைக்குள்ளேயே பல வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஜாம்பவான் இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க பல்வேறு இயக்குநர்களும் பல தருணங்களில் ஆர்வம் காண்பித்தே வந்துள்ளனர்.
இசை தாண்டி அரசியல், தன் கருத்துகளை சமரசமின்றி முன்வைப்பது என சர்ச்சைக்குரிய பெர்சனாலிட்டியாகவும் சமூக வலைதளங்களில் இளையராஜா தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இசைஞானியாக தனுஷ்
இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாகவும் அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ்(Dhanush) நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களின் ஆவலையும் தூண்டியுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இளையராஜாவின் அதி தீவிர ரசிகரான தனுஷ் இதுகுறித்து பெரும் உற்சாகத்தில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் படத்தை இளையராஜா - தனுஷ் இருவருடனும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியுள்ள பிரபல இயக்குநரான பால்கி இயக்க உள்ளதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய படங்கள்
நடிகர் தனுஷூக்கும் இளையராஜாவுக்கும் நல்ல நட்புறவு நிலவும் சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த விடுதலை படத்தில் இடம்பெற்ற ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை தனுஷ் முன்னதாகப் பாடியிருந்தார். அதேபோல் இளையராஜா நடிகர் தனுஷூக்காக மாரி 2 படத்தில் பாடியிருந்தார்.
மேலும் இளையராஜா பாடல்களை தனுஷ் ரசித்துப் பாடுவதை கேட்பதற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இந்தத் தகவல் குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். தனுஷ் முன்னதாக இளையராஜா இசையமைத்த அது ஒரு கனாக்காலம், ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் பிற படங்கள்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தில் நாயகி பிரியங்காவின் காட்சிகள் நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானது.
மற்றொருபுறம் தனுஷ் தான் நடித்து இயக்கும் டி50 படத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)