Michael Douglas: இந்தியா பிரதமர் மோடியின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது - 2 ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் புகழாரம்
Michael Douglas: கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 54 வது பதிப்பு கடந்த வாரம் சினிமா நட்சத்திரங்கள் நிறைந்த தொடக்க விழாவுடன் தொடங்கியது.
ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் இவருக்கு சத்யஜித் ரே எக்ஸலன்ஸ் இன் ஃபிலிம் லைஃப்டைம் விருது, அதாவது சத்யஜித்ரே வாழ்நாள் விருது வழங்கப்பட்டது. ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் உடனான அமர்வில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரைப் பாராட்டினார்.
விழாவைப் பற்றி பேசிய மைக்கேல் டக்ளஸ், “ இந்த விழாவின் அழகு என்னவென்றால், நீங்கள் 78 வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தியது. (78 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட்டன) இது உங்கள் இந்திய படப்பிடிப்பின் வலிமையின் பிரதிபலிப்பு மட்டுமே. உலகம் முழுவதும் இந்தியாவும் இந்திய சினிமாவும் பிரபலமாகி உள்ளது. நீங்கள் நல்ல கைகளில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் குறிப்பிட்டது போல, அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களின் தயாரிப்புக்காக வழங்கும் நிதியுதவிக்கு அதிக பணம் செலவழித்ததைக் பார்க்க முடிகின்றது. சினிமா துறையில் அனுராக் தாக்கூரின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இது இந்தியாவில் சினிமாவுக்கு மிகவும் வெற்றிகரமான காலம் இதுதான்.
இனம், மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கலாச்சாரங்களை ஒன்றிணைப்பதிலும் மக்களை ஒன்றிணைப்பதிலும் திரைப்படங்களின் பங்களிப்பு முக்கியமானது. நாம் பேசும் அனைத்து மொழிகளிலும் ஒரே மொழியைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றால் அது சினிமா மட்டும் தான். உலகில் எங்கிருந்தாலும் சினிமா ரசிகர்கள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள், திரைப்படங்கள் நம் அனைவரையும் மிகவும் நெருக்கமாக்குகின்றன. உலகில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் மிக முக்கியமான அம்சமாக சினிமாவை நினைக்கிறேன்." என கூறியுள்ளார்.
கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 54 வது பதிப்பு கடந்த வாரம் சினிமா நட்சத்திரங்கள் நிறைந்த தொடக்க விழாவுடன் தொடங்கியது. நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் திரைப்பட விழா தொடங்குவதைக் குறிக்கும் வகையில், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் விழாவை அபர்சக்தி குரானா மற்றும் கரிஷ்மா தன்னா தொகுத்து வழங்கினர்.
ஷாஹித் கபூர் மற்றும் மாதுரி தீட்சித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஷ்ரியா சரண், நுஷ்ரத் பருச்சா, பங்கஜ் திரிபாதி மற்றும் இசை மேஸ்ட்ரோக்கள் சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தியா முழுவதும் உள்ள சினிமாகாரர்கள் தொடங்கி சினிமா மாணவர்கள் வரை என பலரும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். தமிழில் இருந்து இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.