நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு 'டீசல்' படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்
Harish Kalyan Birthday : நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளான இன்று அவரது 15 ஆவது படமாக உருவாகி வரும் டீசல் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'டீசல்'
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக அவர் நடித்துள்ள 'டீசல்' படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் 15 ஆவது படமாக உருவாகியுள்ளது ' டீசல்' திரைப்படம். அதுல்யா ரவி , வினய் , அனன்யா. சாய் குமார் , விவேக் பிரசன்னா, ஜகீர் ஹுசைன் , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். டீசல் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது டீசல் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் படக்குழு.
Harish Kalyan's long delayed #Diesel is finally ready for release. Date to be locked soon. pic.twitter.com/EzQ5SiJLvK
— Insplag (@CcInfilmin) June 29, 2025
ஹரிஷ் கல்யாணின் வளர்ச்சி
'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். முதல் படமே சர்ச்சையில் சிக்க அவருக்கு அடுத்தடுத்து பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போயின. இதன் பிறகு பிக்பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே கவனமீர்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் சக போட்டியாளரான ரைசா வில்சன் உடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்தார். ரொமாண்டிக் படமாக உருவான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த மாறுபட்ட காதல் கதையை கொண்டு வெளிவந்த வந்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படமும் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. 2020ஆம் ஆண்டு வெளியான 'தாராளப் பிரபு' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வந்தது. ஆனால் திடீரென வந்த கொரோனாவால் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று பயங்கரமான ஒரு வெற்றியை பெற்றது.
தொடர்ச்சியாக கசட தபற, ஓ மணப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் உள்ளிட்ட பல படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவில் அவை வரவேற்பைப் பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் விமர்சனரீதியாக வெற்றி பெற்றதுடன் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு பாராட்டுகளைக் குவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய இரு படங்களும் அவரை ஒரு முக்கிய நடிகராக அடையாளம் காட்டியிருக்கின்றன. இரு படங்களும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. அந்த வகையில் தற்போது டீசல் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.






















