Vetrimaran Birthday: கலை எனும் ஆடுகளத்தில் அவன் அசுரன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்...
தமிழ் நாவல்களை ரசிக்கும்படி சினிமாவாக தரும் கூறு அவரிடம் இருந்து வெளிப்பட்டது. நாவல்களை, சிறுகதைகளை படமாக்குதல் என்பதை ஒரு ட்ரெண்டாகவே உருவாக்கினார்.
தோல்வியே இல்லாமல் வெற்றி இயக்குநராக வலம்வரும் இயக்குநர் வெற்றிமாறன் தனது ஒவ்வொரு படத்திலும் தமிழ் சினிமாவிற்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறார். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் பல விருதுகளையும் பாராட்டுக்களையும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றவை.
வெற்றிமாறன் - தனுஷ் காம்போவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் நல்ல வரவேற்பை பெற்றன. தனுஷ் இல்லாமல் இவர் எடுத்த விசாரணை, விடுதலை படங்களும் தமிழ் ரசிகர்கள் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றன.
நாவல்களை சினிமாவாக்கும் கலை
இயக்குநராக ரசிகர்களைக் கொண்ட வெகு சிலரில் முக்கியமானவராக வெற்றிமாறன் கொண்டாடப்படுவதற்கு முழு காரணம், இவர் பார்வையாளர்களின் அறிவை குறைத்து மதிப்பிட்டு கதைகள் எழுதுவதில்லை. இவர் படங்கள் பல புதிய களங்களை, காலங்களை, காணாதவற்றை, ஆச்சர்யமானவற்றை யதார்த்தமாக பதிவு செய்கின்றன. குறிப்பாக ஆடுகளம் கே.பி. கருப்பு, வடசென்னை அன்பு, அசுரன் சிவசாமி ஆகிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் தனுஷூக்கு ஒரு தேர்ந்த நடிகர் என்ற பெயரை பெற்றுத்தர பெரும் உதவியாக இருந்தன. தமிழ் நாவல்களை ரசிக்கும்படி சினிமாவாக தரும் கூறு வெற்றிமாறனிடம் இருந்து வெளிப்பட்டது.
நாவல்களை, சிறுகதைகளை படமாக்குதல் என்பதை ஒரு ட்ரெண்டாகவே உருவாக்கினார். ஆனால் அவர் அளவுக்கு தற்கால இயக்குனர்கள் யாராலும் அந்த வித்தையை நேர்த்தியாக செய்ய முடியவில்லை. அதற்கு அவரது கலை நேர்த்தியும், கலை மீதுள்ள காதலும் முக்கியமானது.
புதுமைப்பித்தனின் சிற்றனையை உதிரிப்பூக்களாக மாற்றிய மகேந்திரனின் நேர்த்தி இவருக்கு மட்டுமே வாய்த்துள்ளது. பூமணியின் வெக்கையை அசுரன் ஆக்கியது, லாக்கப் நாவலை விசாரணை ஆக்கியது என அவர் செய்த படங்கள் ஹிட் ஆக, மேலும் பல நாவல்களை ரைட்ஸ் வாங்கி பக்கெட் லிஸ்டில் வைத்துள்ளார்.
முன்னதாக ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட விடுதலை திரைப்படம் கலவையான விமர்சனங்களைத் தாண்டி மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. சூரிக்கு திருப்புமுனை படமாக அமைந்து அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அதில் ஒன்றுதான் சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வாடிவாசல்’ ஆகும். சி.சு. செல்லப்பா எழுதிய இந்த நாவல் அதே டைட்டிலில் படமாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இவை மட்டுமின்றி வரும் காலங்களில் இயக்குவதற்கும் பல நாவல்களை வெற்றிமாறன் வாங்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தரமான திரைப்படங்களை இயக்கி வரும் இவர் பெயரே தமிழ் சினிமாவுக்கு பெரும் அடையாளமாக மாறி உள்ளது.
மென்மேலும் நல்ல சினிமாக்களை தரும் இவரால் தமிழ் சினிமா எட்டப்போகும் உயரம் ஏராளம். உலக அரங்கில் பல விருதுகளை குவித்து இவர் போகப்போகும் தூரமும் ஏராளம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்