Gautham Menon Movies: அஜித், விஜய் முதல் அமீர் கான் வரை.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கைவிடப்பட்ட கெளதம் மேனன் படங்கள்!
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்து பின் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
கெளதம் மேனன்
ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படங்களுக்கு என ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர் இயக்குநர் கெளதம் மேனன். மின்னலே காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் என இவரது படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்து வருகின்றன. கெளதம் மேனன் இயக்கிய படங்களைக் காட்டிலும் அவர் இயக்கவிருந்து கைவிடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.
இரு விழி உனது
மின்னலே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவிருந்த படம் ’இரு விழி உனது’ இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருந்தார். மின்னலே படத்தில் இடம்பெற்ற பாடலான இரு விழி உனது வரிகளையே தனது இரண்டாவது படத்திற்கான டைட்டிலாக வைத்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்படம் அப்படியே கிடப்பில் விடப்பட்டது.
சென்னையில் ஒரு மழைக்காலம்
2003ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்கிற படத்தை இயக்க இருந்தார் கெளதம் மேனன். இப்படத்தில் நடிகை அபிராமி நாயகியாக நடிக்க முடிவு செய்யப் பட்டார். ஆனால் அபிராமி சூர்யாவை விட உயரம் என்பதால் இப்படத்தில் வேறு ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பின் த்ரிஷா இப்படத்தில் நாயகியாக தேர்வு செய்யப் பட்டார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. கெளதம் மேனனின் தனிப்பட்ட சில பிரச்சனைகளால் இப்படம் கைவிடப்பட்டது. இப்படத்தின் கதையில் சில பகுதிகளை வாரணம் ஆயிரம் படத்தில் எடுத்தார் கெளதம் மேனன்.
சூராங்கணி
2008ஆம் ஆண்டு சிவாஜி ப்ரோடக்ஷ்ன்ஸ் சார்பாக கெளதம் மேனன் இயக்கவிருந்த படம் சூராங்கணி. இப்படத்தில் அஜித் நாயகனாக சமீரா ரெட்டி நாயகியாக நடிக்க இருந்தார்கள். அஜித் நடித்த பில்லா படத்தின் முந்தைய பாகமாக இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவிருந்தார். ஆனால் சூராங்கனி என்கிற டைட்டிலை ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் உரிமம் பெற்றுள்ளதாகக் கூறியதால் இப்படத்தின் டைட்டில் சர்ச்சை ஏற்பட்டது. பின் படத்திற்கான திரைக்கதையை எழுத தனக்கு தேவையான நேரத்தை தராமல் தயாரிப்பாளர்கள் அவசரப்படுத்தியதாகக் கூறி கெளதம் மேனன் இப்படத்தில் இருந்து விலகினார். இதே படத்தின் கதைதான் பின் பில்லா 2 ஆக வெளியானது.
துப்பறியும் ஆனந்த்
2008ஆம் ஆண்டு கெளதம் மேனன் கையில் எடுத்த இன்னொரு கதைதான் துப்பறியும் ஆனந்த். 1930களில் நடக்கும் ஸ்பை திரில்லராக இந்தப் படத்தை திட்டமிட்டார் அவர். முதலில் சூர்யா பின் கமல், ஆமீர் கான், அஜித் குமார் என எல்லா நடிகர்களிடமும் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அன்றைய சூழலில் இப்படியான ஒரு படம் உருவாவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்ததோ என்னவோ படத்தில் நடிக்க நடிகர்கள் முன்வரவில்லை.
யோஹன் அத்தியாயம் ஒன்று
ஹாலிவுட் ஸ்டைலில் ஜேம்ஸ் பாண்ட் படத்தைப் போல் கெளதம் மேனன் விஜய்க்கு எழுதிய கதைதான் யோஹன். இப்படத்தின் கதையை விஜய்யிடம் தான் சொன்னதாகவும், ஆனால் விஜய்க்கு இந்தக் கதையின் மேல் பெரிதான உடன்பாடு இல்லை என்றும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதை, வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு இப்படம் புரியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஜய் கருதியுள்ளார்.
நதிகளிலே நீராடு சூரியன்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக சிலம்பரசன் நடித்து கெளதம் மேனன் இயக்கவிருந்த படம் நதிகளிலே நீராடும் சூரியன். கொரோனா நோய் தொற்று பரவலால் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமலே போனது. பின் இந்தக் கதையை கைவிட்டு உருவான படம் தான் வெந்து தணிந்தது காடு.
இப்படி காக்க காக்க 2, வேட்டையாடு விளையாடு 2, வெந்து தணிந்தது காடு 2, விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களின் கதையும் தன்னிடம் ரெடியாக இருப்பதாகவும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.