Kriti Verma: ரூ.264 கோடி பணமோசடி புகார்.. அமலாக்கத்துறை விசாரணையில் பிக்பாஸ் போட்டியாளர் க்ரீத்தி வர்மா
பிக்பாஸ் போட்டியாளர் க்ரீத்தி வர்மாவிடம் ரூ.264 கோடி பணமோசடி புகாரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் உடன் தொடர்பில் இருந்ததாக, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதுதொடர்பான பரபரப்பு முழுமையாக ஓய்வதற்கு முன்பாகவே, மேலும் ஒரு நடிகையிடம் பணமோசடி புகாரில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்த நடிகை ரோடீஸ் மற்றும் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 12 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, நடிகை க்ரீத்தி வர்மா தான்.
க்ரீத்தி வர்மா:
வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த க்ரீத்தி வர்மா, நடிப்பின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, தனது பணியை துறந்துவிட்டு படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில் முதலில் அவர், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி, ரோடிஸ் மற்றும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். இதன் மூலம் வெகுஜன மக்களிடம் அறிமுகமானார். இந்நிலையில் தான், க்ரீத்தி வர்மா மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
மும்பை வருமான வரித்துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரி விலக்கு பெறுவதில் ரூ.264 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதனடிப்படையில் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். புகார் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறையினரும் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர். இதில் க்ரீத்தி வர்மா வருமான வரித்துறையில் பணிபுரிந்த போது, போலியான ஆவணங்களை சமர்பித்து வரி விலக்கு பெற்ற குற்றவாளிகளுக்கு துணை போனதாக கூறப்பட்டது. 2007-08, 2008-09 நிதியாண்டுகளுக்கான வரி விலக்குகளை பெறும் சமயத்தில் தான் இந்த நிதி மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட நிதி ஷெல் நிறுவனங்கள் மற்றும் பூஷன் பாட்டில் உள்ளிட்ட பலரது வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை:
இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, மும்பை தொழில் அதிபர் பூசன் பாட்டீல் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பணம் நடிகை க்ரீத்தி வர்மா வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. தொடர்ந்து, அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டிஸ் அடிப்படையில், ரூ.263 கோடி பண மோசடி புகாரில் க்ரீத்தி வர்மா நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தேன்:
குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய க்ரீத்தி வர்மா, “பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் பூசன் பாட்டீலுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தேன். நான் பங்கேற்ற நடன நிகழ்ச்சிக்காகவே அவர் பணம் கொடுத்தார். ஆனால், பூசன் பாட்டில் பண மோசடி புகாரில் சிக்கி இருப்பது தெரியவந்ததும் அவருடான தொடர்பை கைவிட்டுவிட்டேன்” என விளக்கமளித்துள்ளார்.