கூலி முதல் மாமன் வரை...2025 இல் அதிகம் வசூலித்த தமிழ் படங்கள்
Highest Grossing Tamil Movies 2025: இந்த ஆண்டு தமிழில் வெளியாகி அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

2025 ஆம் ஆண்டில் பல பெரிய பட்ஜெட் , மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகின. ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்த கூலி , தக் லைஃப் போன்ற படங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய கமர்சியல் வெற்றிபெற்றன. இந்த ஆண்டு தமிழில் வெளியாகி அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியல் இதோ

10 மாமன்
விடுதலை , கருடன் என தொடர்ச்சியாக நாயகனாக இரு வெற்றிப்படங்களை கொடுத்தார் சூரி. அடுத்தபடியாக வெளியான கொட்டுக்காளி திரைப்படம் பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளானது. சர்வதேச அளவில் இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் உள்ளூர் ரசிகர்களை படம் பெரிதாக கவரவில்லை. இதன்பின் மக்கள் ரசிக்கும் விதமாக எளிய குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியான மாமன் மீண்டும் சூரியை வெற்றிப்பாதையில் கூட்டிச் சென்றது. இப்படம் ரூ41.15 கோடி வசூலித்து இந்த ஆண்டு அதிகம் வசூலித்த படங்களில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது
9 தலைவன் தலைவி
விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் விஜய் சேதுபதிக்கு தேவையான கமர்சியல் வெற்றியைக் கொடுத்த படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். காமெடி காட்சிகள் சிறப்பாக அமைய குடும்ப ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படம் 85.40 கோடி வசூல் செய்தது
8 டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி இந்த ஆண்டு பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆன படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் ரூ 86.25 கோடி வசூலித்தது. காமெடி , எமோஷன் , ரொமான்ஸ் ஷான் ரோல்டனின் இசை படத்தை பக்கா ஃபேமிலி என்டர்டெயினராக அமைந்தது டூரிஸ்ட் ஃபேமிலி
7 ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 ஆவது படமாக வெளியானது ரெட்ரோ. கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் சூர்யாவின் கரியரில் ஒரு சிறு ஆறுதல் வெற்றியாக அமைந்தது கங்குவா . படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வழக்கமான கமர்சியல் படமாக இல்லாமல் ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது ரெட்ரோ. இப்பட உலகவில் ரூ 97.35 கோடி வசூலித்துள்ளது
6 மதராஸி
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஆக்ஷன் திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் திரைப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து வெளியான மதராஸி படத்திற்கு ஆரம்பம் முதலே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய முந்தைய படங்கள் தோல்வி அடைந்தது, சுமாரான ப்ரோமோஷனை இதற்கு காரணமாக சொல்லலாம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான மதராஸி திரைப்படம் 99.12 கோடி வசூலித்தது.
5 டியூட்
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டையாடிய படம் டியூட் . அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ , சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். லவ் டுடே , டிராகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து 100 கோடி வசூலித்த டியூட் , பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது. இப்படத்தின் மொத்த வசூல் 113.25 கோடி
4 விடாமுயற்சி
இரண்டு ஆண்டு காத்திருப்புப் பின் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு திரையரங்கத்தில் வெளியானது. ஆக்ஷன் , மாஸ் நிறைந்த அஜித்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது என்றே சொல்லலாம் . ஆனால் அனிருத்தின் இசை , படத்தின் டிரைலர் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. 135.65 கோடி இப்படம் வசூல் செய்தது

3 டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் 150 கோடி வசூலித்தது
2 குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு பக்கா கமர்சியல் விருந்தாக அமைந்தது. படத்தின் கதை பெரியளவில் இல்லையென்றாலும் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்தே படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார் ஆதிக். இப்படம் ரூ 248.25 கோடி வரை வசூலித்துள்ளது
1 கூலி
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டும் வசூல் மன்னனாக திகழ்கிறார் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் , கூலி திரைப்படம் வெளியாகி பல விமர்சனங்களை சந்தித்தாலும் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கூலி உலகளவில் ரூ 518 கோடி வரை வசூல் செய்து 2025 ஆம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது





















