Diwali 2022 TV Movies:தீபாவளிக்கு எந்த டிவி சேனலில் என்ன படம்? - ஃபுல் மூவிஸ் லிஸ்ட் இதோ !
தொலைக்காட்சியில் என்ன புது படம் போடுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் நாட்களில் தீபாவளியும் ஒன்று. இந்த தீபாவளிக்கு எந்த சேனலில் என்ன படம் ஒளிபரப்பாக உள்ளது என்கின்ற பட்டியலை இங்கு காணலாம்.
நாள் நெருங்க நெருங்க தீபாவளி குஷியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தீபாவளி என்றால் பட்டாசும் புது துணியும் மட்டுமா என்ன? தொலைக்காட்சியில் எந்த சேனலில் என்ன புது படம் போடுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் நாட்களில் தீபாவளியும் ஒன்று. ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு புது படங்களை ஒளிபரப்ப, அதில் எதை பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறுவோம். இதில் விளம்பரம் போடுகையில் அடுத்த சேனலும், அதில் விளம்பரம் போடுகையில் இது என நம் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இந்த வருடம் தீபாவளிக்கு எந்த சேனலில் என்ன புது படம் ஒளிபரப்பாக உள்ளது என்கின்ற பட்டியலை இங்கு காணலாம்.
பீஸ்ட்
தீபாவளி என்றாலே தல தளபதியின் திரைப்படங்கள் ரிலீஸாவது வழக்கம். இந்த தீபாவளிக்கு ஏனோ விஜய், அஜித் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் ஒவ்வொரு தீபாவளிக்கும் சன் டிவியில் விஜய் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். பிகில், தெறி, ஜில்லா என அனைத்து திரைப்படங்களும் தீபாவளி அன்று ஒளிபரப்பாகி உள்ளது. அந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளது பீஸ்ட். தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.
டான்
சன் டிவியில் பீஸ்ட் என்றால் கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் டான் ஒளிபரப்பாக உள்ளது. சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் மாணவனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. பீஸ்ட் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் கலைஞர் டிவியில் டான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. டான் திரைப்படம் வசூலில் 100 கோடியைத் தாண்டியுள்ளது.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் வசூல் 400 கோடியை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படத்தை விஜய் டிவி ஒளிபரப்பு செய்கிறது. படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றம் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.
கே.ஜி.எஃப் 2
ரிலீஸில் பீஸ்ட் திரைப்படத்துடன் போட்டியிட்ட கே.ஜி.எஃப் 2, தீபாவளி ஒளிபரப்பிலும் பீஸ்ட் உடன் போட்டியிடுகிறது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.இந்த திரைப்படம் வசூலில் உலகளவில் சாதனை படைத்த திரைப்படம். உலகளவில் 1200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. உலகளவில் அதிக வசூல் படைத்த இந்திய திரைப்படங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது கே.ஜி.எஃப் 2. வழக்கம் போல கே.ஜி.எஃப் 1 திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் நாம் எதிர்பார்க்கலாம்.
மாநாடு
சிம்புவின் மாநாடு திரைப்படம் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவிட்ட நிலையில் விஜய் சூப்பரில் இந்த தீபாவளிக்கு முதன் முதலில் ஒளிபரப்பாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் 117 கோடி வசூல் செய்தது.
தீபாவளிக்கு ஒவ்வொரு சேனலும் புது படங்களை வரிசையாக இறக்குகின்றன. இந்த தீபாவளிக்கு வீட்டில் விருந்து என்றால் டிவியில் மெகா விருந்து காத்திருக்கின்றது.