Divya Spandana: ஆணின் மனதும், தெரு நாயும் ஒன்றா? - ஒப்பீடு செய்த நடிகை திவ்யாவுக்கு குவியும் கண்டனம்!
சாலைகளில் தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பான தீர்ப்புக்கு இணங்காத மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை ஆண்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு நடிகையும், முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
சாலைகளில் தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பான தீர்ப்புக்கு இணங்காத மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெருநாய்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை குறிப்பிட்டு திவ்யா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது.
அதாவது, “தெரு நாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, சாலைகள் நாய்கள் மற்றும் தெரு விலங்குகள் இல்லாமல் இருக்க வேண்டும். காலையில் எந்த நாய் எந்த மனநிலையில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது” என தெரிவித்தது.
இதனை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை திவ்யா ஸ்பந்தனா வைத்துள்ளார். அதில், “ஒவ்வொரு ஆணின் மனதையும் படிக்க முடியாது. அவன் எப்போது பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்வான் என்று தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதுதான் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொல்லை
இந்தியாவைப் பொறுத்தவரை தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை போதிய அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எங்கு திரும்பினாலும் கும்பல், கும்பலாக நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி நிலைகுலைய செய்கிறது. நாய் கடியால் ரேபிஸ் பாதிப்பு, உயிரிழப்பு வரை நிகழ்வதால் இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் தெரு நாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அகற்றி, அவற்றை நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும்” என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை.
நாய்களை பிடித்து அவற்றை காப்பகங்களில் அடைக்காமல் அவற்றிற்கு கருத்தடை ஊசி, ரேபீஸ் தடுப்பூசி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தெருக்களில் விடப்படுகிறது. அவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்காமல் விடுவதால் மீண்டும் மீண்டும் சிக்கல் எழுகிறது என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.





















