Manobala: இறந்து விடுவேன் என முன்கூட்டியே சொன்ன மனோபாலா.. அரண்மனை 4 பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்
நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே மனோபாலா எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தார். என்னை வாடா போடா என அழைக்கும் வெகு சில மனிதர்களில் அவரும் ஒருவர்.
மனோபாலா இல்லாதது அரண்மனை 4 படத்துக்கு மிகப்பெரிய இழப்புதான் என இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது இயக்கத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் தற்போது அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ்,டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள அரண்மனை 4 படம் ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் அரண்மனை படத்தின் 3 பாகங்களிலும் மறைந்த இயக்குநர் மனோபாலா நடித்திருந்தார். அவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. ஆனால் 4 ஆம் பாகத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே கடந்தாண்டு மே மாதம் 3 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரைத்துறையினர்,ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே அரண்மனை 4 படத்தின் ப்ரோமோஷன் நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர் சி, மனோபாலா பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “மனோபாலா இல்லாதது அரண்மனை 4 படத்துக்கு மிகப்பெரிய இழப்புதான். இந்த படத்தில் அவருக்கென ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. நாங்கள் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்த நிலையில் ஒரு வாரத்தில் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. அப்போது மனோ பாலாவிடம் இருந்து எனக்கு ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அதில் என்னால் இந்த படம் பண்ண முடியாது. நான் ஹாஸ்பிடலில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது.
அதனால் எனக்கு பதில் அரண்மனை 4 வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள் என தெரிவித்திருந்தார். நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே மனோபாலா எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தார். என்னை வாடா போடா என அழைக்கும் வெகு சில மனிதர்களில் அவரும் ஒருவர். மருத்துவமனையில் இருக்கும் போட்டோ எல்லாம் அனுப்பி சாரி கேட்டிருந்தார். நான் உடனே மனோபாலாவுக்கு கால் பண்ணி விடுங்க சார் இந்த ஒரு படம் தானே அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என சொன்னேன். ஆனால் அதற்கு அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இல்லடா ரொம்ப நாள் நான் இருக்க மாட்டேன் என என்னிடம் தெரிவித்தார். அதை என்னால் மறக்க முடியாது” என இயக்குநர் சுந்தர்.சி கூறியுள்ளார்.