பிரபல இசையமைப்பாளர் காட்டிய கெத்து.. சோகத்துடன் பகிர்ந்த இளம் இயக்குநர்!
கடந்த 2020ம் ஆண்டு வெளியான கல்யாண ராமன் மற்றும் 2023ம் ஆண்டு வெளியான டபுள் டக்கர் ஆகிய படங்களை இயக்கியவர் மீரா மஹதி

ஒரு பெரிய இசையமைப்பாளருடன் நடந்த சம்பவத்தை மிகவும் வேதனையுடன் டபுள் டக்கர் படத்தின் இயக்குநரான மீரா மஹதி பகிர்ந்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு வெளியான கல்யாண ராமன் மற்றும் 2023ம் ஆண்டு வெளியான டபுள் டக்கர் ஆகிய படங்களை இயக்கியவர் மீரா மஹதி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இரு படங்களை இயக்கி பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் வாழ்க்கையில் ஒரு பெரிய இசையமைப்பாளருடன் நடந்த சம்பவத்தை இங்கே பகிர்கிறேன். நான் சினிமாவை ஒரு கோவில் போல நினைத்தவன். என்னுடைய 'டபுள் டக்கர்' படத்திற்காக இசையமைப்பாளர், நடிகைகள் என்று தேடித் தேடி அலைந்தோம். முகம் தெரிந்த எந்த நடிகையும் நடிக்க சம்மதிக்கவில்லை. காரணம்: நான் புதிய இயக்குநர், ஹீரோவும் புதியவர்.
கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட ஹீரோயின்களுக்கு கதை சொன்னேன். வழக்கமாக, ஒரு Formalityக்காக கதை கேட்டுவிட்டு, 'வேண்டாம்' என்று சொல்லிவிடுவார்கள்.
.
அடுத்து இசையமைப்பாளர்கள்! இப்போதைய ட்ரெண்டிங் இசையமைப்பாளர்கள் முதல் பெரிய ஜாம்பவான்கள் வரை அனைவரிடமும் கேட்டோம். எல்லார் பதிலும்: "புது முகங்களுக்கு 'நோ'!" இத்தனைக்கும் சம்பளம் ஒரு பிரச்னையே இல்லை, தயாரிப்பாளருக்கு!...
.
சினிமாவில் ஏன் இந்த நிலை என்று எனக்குப் புரியவில்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நான் தயாராக இருந்தாலும், ஏற்கெனவே நடிகைகள் சொன்ன அனுபவத்தால் பயந்துபோன தயாரிப்பு தரப்பு, "இனி புதிய முகங்கள் வேண்டாம்" என்று சொல்லிவிட்டது.பெரிய இசையமைப்பாளருடன் ஒரு சந்திப்பு!
இறுதியில், ஒரு பெரிய இசையமைப்பாளரிடம் சென்றோம். அவர் இசையமைத்தாலே, படம் ஹிட்டோ இல்லையோ, பாடல்கள் ஹிட்! அவர் வீட்டிற்குச் சென்றோம். அவர் வரச் சொன்ன நேரம் 12 மணி. நாங்கள் 11:45-க்கே ஆஜர்!. மணி இரண்டைத் தாண்டியது. சாப்பிடப் போனால் அப்பாயின்ட்மென்ட் கேன்சல் ஆகிவிடுமோ என்று பயந்து சாப்பிடவும் இல்லை. மாலை நான்கு மணிக்கு அவர் வெளியே வந்தார். "வாங்க, சாப்பிடுவோம்" என்று அன்பாக அழைத்தார். அடடா! என்ன ஒரு நல்ல மனிதர் என்று நினைத்தேன். அவருடன் அமர்ந்து சாப்பிட்டோம்.எனக்கு துவையல் கொஞ்சம் அதிகமாக வைத்துவிட்டார்கள். எனக்குச் சாப்பிடப் பிடிக்காமல், கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு துவையலை வைத்துவிட்டேன். அதைப் பார்த்த அவர், "சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க. அதை நான் எடுத்து சாப்பிடட்டுமா?" என்று கேட்டார்.
அடடா! கடவுளுக்கு நிகரானவர் என்று நினைக்க வைத்த அந்த மனிதர், பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக தன் உண்மை முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். வந்த விஷயத்தைப் பேசாமல், அவர் சினிமாவில் புதியதாக இருந்தபோது பார்த்த சில மனிதர்களைப் பற்றி திட்டிக்கொண்டிருந்தார். அப்போதே தெரிந்தது, "உங்களுக்கெல்லாம் ஏண்டா இந்த பேராசை? உங்களுக்கு நான் மியூசிக் பண்ணனுமா?" என்று ஜாடை மாடையாகச் சொல்கிறார் என்று. நான் கதை சொல்லலாமா என்று கேட்டேன்.
அவர் ஒரு நக்கல் பார்வை பார்த்தார். சின்ன சீன் சொல்கிறேன் என்று சொன்னபோதும், அதே நக்கல் முகத்தை வைத்துக்கொண்டு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.பெரிய மியூசிக் டைரக்டர். அட்லீஸ்ட் கதையைக் கேட்டாவது, "இப்படிப் பண்ணாதீங்க, மாத்திப் பண்ணுங்க" என்று ஒரு அறிவுரை சொல்லி இருந்தால் கூட, சந்தோஷமாக வந்திருப்பேன். "சரி, கதையில் பெரியதாக எதிர்பார்ப்பார் போல," என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டு திரும்பிவிட்டேன்.
சமீபத்தில் ஒரு குப்பையான குடும்பப் படத்துக்கு இசையமைத்திருந்தார். அப்பொழுதுதான் புரிந்தது: படம் எவ்வளவு குப்பையாக இருந்தாலும் பரவாயில்லை, கோடிகளில் சம்பளம் மற்றும் தெரிந்த முகம் ஹீரோவாக இருக்க வேண்டும்! இதுதான் அவர் எதிர்பார்ப்பு. தனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்காகவோ, அடுத்த தலைமுறை கலைஞர்கள் பற்றியோ அவருக்கு கவலையே இல்லை!” என பதிவிட்டிருந்தார். ஆனால் இயக்குநர் மீரா மஹதி யார் அந்த இசையமைப்பாளர் என குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















