Mani Ratnam - Mari Selvaraj: மெளன ராகம் படத்துல இதான் நடந்தது... மாரி செல்வராஜூக்கு மணி ரத்னம் கொடுத்த அட்வைஸ்..!
ஒரு படம் வெளியானப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வதென்று இயக்குநர் மாரி செல்வராஜூக்கு இயக்குநர் மணிரத்னம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற மாமன்னன் திரைப்படம் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. மாரி செல்வராஜ் இயக்கிய முந்தையப் படங்களான கர்ணன் , பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களும் இந்த விமர்சனங்களை சந்தித்தன.
சமீபத்தில் ஒருங்கிணைக்கப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலர் சினிமா குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சுதா கொங்காரா, மணி ரத்னம் , வெற்றிமாறன் , மடோன் அஸ்வின் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது
இயக்குநர் மணிரத்னமிடம் பேசிய மாரி செல்வராஜ் தன்னுடைய கேள்வியை இப்படி முன்வைத்தார் . “மணி சார், நீங்கள் இயக்கிய பல படங்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்றன. ரோஜா , பம்பாய் உள்ளிட்டப் படங்களை இந்த வரிசையில் சேர்க்கலாம். ஒரு படைப்பாளியாக நாம் நம் பார்வையில் ஒரு காட்சியை எழுதுகிறோம் அதற்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தாலும் நம்முடைய பார்வையை நாம் முன்வைக்கிறோம்.
ஆனால் நம்முடைய படம் ஒன்று வெளியாகும் போது அதில் நாம் சொல்லும் கருத்துக்களை தவறாக புரிந்துகொள்கிறார்கள். அல்லது அதை திரித்துச் சொல்கிறார்கள். நான் தொடங்கி வைத்த ஒரு விவாதம் சமூக வலைதளங்களில் இப்படி சென்றுகொண்டிருக்கும் போது நான் அதில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்கிற குழப்பம் எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இதை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்” என்று மாரி செல்வராஜ் கேள்வி எழுப்பினார்
மணிரத்னம் அட்வைஸ்
”நம்மிடம் இரண்டரை மணி நேரம் கொடுக்கப் படுகிறது. அந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக என்னுடைய கருத்தை நான் தெரிவித்து விடுகிறேன். அதை பார்க்கும் மக்கள் இரு தரப்புகளில் இருந்து அதை விவாதிக்கிறார்கள். இதற்கிடையில் சென்று நான் கலந்துகொள்வது சரியாக இருக்காது. நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் என்னுடைய படத்தில் சொல்லிவிட்டேன். அப்படி நான் சொல்ல வந்த கருத்தை ஒருவன் தவறாக புரிந்துகொள்கிறார் என்றால் அந்த பழியை நான் எடுத்துக் கொள்வேன். அந்த காட்சியை இன்னும் புரியும் வகையில் அல்லது அந்த காட்சியை நான் எடுக்காமல் இருந்திருக்க வேண்டும் என்று என்னுடைய தவறை ஏற்றுக் கொள்வேன்.
மெளன ராகம்
மெளன ராகம் படம் வெளியானபோது சென்னைக்கு வெளியே உள்ள ஒரு திரையரங்கத்தில் படம் பார்க்க சென்றிருந்தேன். படம் வெளியான இரண்டாவது நாள் முதல் பத்து வரிசையும் காலியாக இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த இரண்டு நபர்கள் என்ன படம் இது அந்த பெண்ணை ரெண்டு அடி அடிச்சிருந்தா சொல்றத கேட்டிருக்கும் ‘ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவர்களுக்கு அந்த கேள்வியும் வராத வகையில் நான் அந்த படத்தை எடுத்திருக்க வேண்டும் . ஒரு பெண்ணை அடித்தால் பிரச்சனை சரியாகி விடாது என்பதை நான் அவர்கள் என்னுடைய படத்தின் மூலம் உணர்த்தியிருக்க வேண்டும் இதுதான் தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதம்” என்று மணிரத்னம் கூறினார்