Director Lingusamy: ’விஜய் மேல கோபம் இருந்துச்சு’ - 18 ஆண்டுகளுக்கு முன் லிங்குசாமிக்கு நடந்த சம்பவம்
"என்னுடைய உதவியாளர்கள் ஒரு மாஸ் கதையில் விஷால் எப்படி செட் ஆவார் என நினைத்தார்கள். நான் கதை மேல் இருந்த நம்பிக்கையில் விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்தேன்"
விஜய் மீது தனக்கு ஏற்பட்ட கோபம் பற்றி இயக்குநர் லிங்குசாமி நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண், லால் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘சண்டகோழி’. ஜி.கே.ரெட்டி தயாரித்த இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டித்த சண்டகோழி படம் வெளியாகி சில தினங்களுக்கு முன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்படியான நிலையில் அந்த படம் தொடர்பான சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் லிங்குசாமி தெரிவித்தார்.
அதில், “ஜி படத்தின் ஷூட்டிங் தாமதமான நிலையில், நாம சும்மா தானே இருக்கிறோம் என பேச ஆரம்பித்தபோது உருவானது தான் சண்டகோழி படம். இந்த கதை முடித்தவுடன் விஜய்யிடம் தான் கதை சொன்னேன். இன்டர்வெல் வரை கதை கேட்டவர் அதன்பிறகு ராஜ்கிரண் எண்ட்ரீ வந்ததும் கதை சொல்வதை நிறுத்த சொன்னார். அவர் வந்த பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என கேட்டார்.
நான் இரண்டாம் பாதி கேட்டு சொல்லுங்கள் என கூற, அவர் மறுத்து விட்டார். ஆனால் விஜய் மறுத்து விட்டார். நானும் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். அதன்பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா அந்த கதையை கேட்டு நடிப்பதாக இருந்தது. ஆனால் என்னுடைய சம்பளம் பற்றி வதந்தி பரவியதால் பாலா இந்த படத்தை தயாரிக்க முடியவில்லை.
பின்னர் ரோஜா கம்பைன்ஸ் ஞானவேல் விஷாலிடம் சண்டகோழி படத்தின் இடைவேளை காட்சியை மட்டும் சொல்லியுள்ளார். இதைக் கேட்டவுடன் நேராக என்னிடம் வந்து விட்டார். இந்த படம் பண்ணலாம் என கேட்டார். என்னுடைய உதவியாளர்கள் ஒரு மாஸ் கதையில் விஷால் எப்படி செட் ஆவார் என நினைத்தார்கள். நான் கதை மேல் இருந்த நம்பிக்கையில் விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஜி படம் ரொம்ப நாளா போய்கிட்டே இருந்துச்சு. அதேசமயம் விஷால் இந்த படத்துக்காக வேற எந்த படமும் பண்ணவில்லை. சரியா படம் வந்துச்சு. விஷால் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
சண்டகோழி படம் ரீலிசான பிறகு ஏ.எம்.ரத்னம் அவர்களின் சார்பில் ஒரு பார்ட்டி ஒன்று லீமெரிடியன் ஹோட்டலில் நடந்தது. அப்போது அங்கு வந்த விஜய் என்னை பார்த்து விட்டார். நேராக வந்து என்னிடம், ‘அண்ணா படம் சூப்பரா இருந்துச்சு’ என சொன்னார். எனக்கு விஜய் நடிக்கவில்லை என சின்ன கோபம் இருந்துச்சு. உடனே நான், ‘நீங்க தான் இரண்டாம் பாதி கேட்கவே இல்லையே’ என சொன்னேன். இல்லைன்னா இந்த மாதிரி பையன் தான் சரி. சினிமாவுக்கு இந்த மாதிரி ஆள் வரணும்ன்னு இருந்துருக்கு. விஷால் தான் சரி. 2ம் பாதியில் உள்ள சண்டை காட்சி எல்லாம் வேற லெவல்’ என சொன்னார். அவர் சொன்னது எனக்கு சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது” என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.