Karthik Subbaraj: ஜனநாயகனுக்கு வந்த சோதனை.. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேதனை!
குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்காமல் இருப்பது, சினிமாவை அழிப்பதற்குச் சமம் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு இது ஒரு கடினமான காலம் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேதனை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “ஒரு சினிமா ரசிகனாக சில எண்ணங்கள்!! குறைந்த பட்ஜெட் கொண்ட ஒரு சுயாதீனப் படமான சல்லியர்களுககு திரையரங்குகள் இல்லை. நாளை வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தின், பெரிய பட்ஜெட் படமான ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைத் தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகிறது.
நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் பராசக்தி படம் தொடர்பான சிக்கல்களால் பல மையங்களில் முன்பதிவுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. சினிமாவிற்கு இது ஒரு கடினமான காலம்!! சுயாதீன, குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் அதிக ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில் பெரிய செயற்கைக்கோள் மற்றும் OTT நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கான ஒரே ஆதாரமாக திரையரங்குகள் மட்டுமே உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்காமல் இருப்பது, சினிமாவை அழிப்பதற்குச் சமம். பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைகளுக்கான கடுமையான காலக்கெடு விதிகளைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக உள்ளது.
Some Thoughts just as a Lover of CINEMA!!
— karthik subbaraj (@karthiksubbaraj) January 8, 2026
No theatres for an Low budget Indie film #Salliyargal
Censor delay causing postponement of a Big budget Big Star like Vijay Sir's film #JanaNayagan slated to release tomorrow...
Bookings are yet to open in many centres due to issue of… pic.twitter.com/9ixK3u2qRa
இது குறிப்பாக, வெளியீட்டுத் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கும்போது, பிந்தைய தயாரிப்புப் பணிகளின் போது திரைப்படத் தயாரிப்பாளர்களின் படைப்புச் சுதந்திரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைகளுக்கான தற்போதைய காலக்கெடு விதிகளின்படி, ஒரு படம் முழுமையாக முடிக்கப்படுவதற்குச் சிறந்த நேரம் வெளியீட்டுத் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்புதான்.
இது பல காரணங்களால் சாத்தியமற்றது. இது சீரமைக்கப்பட்டு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குச் சற்று எளிதாக்கப்பட வேண்டும். இது தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தணிக்கை வாரியம் என அனைவராலும் செய்யப்பட வேண்டும்... இல்லையெனில், பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் தள்ளிப்போவது இறுதியில் இந்தத் தொழிலையே அழித்துவிடும்.
திரைத்துறை சகோதர சகோதரிகளே, தயவுசெய்து நாம் அனைவரும் ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கலையைக் காப்பாற்ற, சினிமாவை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய ஒன்றிணைவோம்” என கூறியுள்ளார்.





















