Director Amir: போதைப்பொருட்களை தடுக்க உடற்பயிற்சி போட்டி.. களத்தில் இறங்கிய நடிகர் அமீர்!
மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சம். ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்று நடிகர் அமீர் பேசி இருக்கிறார்.
தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்த இருக்கிறார்.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்த இருக்கிறார்.
இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சம். ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர். இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம்.
ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று. நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்கு. நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்," என்று கூறினார்.
“நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். மோகன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்," என்று அமீர் தெரிவித்தார்.
"இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
மற்ற போட்டிகளை போலல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை க்ஊகுவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.