Bhavatharini: மஸ்தானா மஸ்தானா இல்ல.. மறைந்த பவதாரிணி பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மறைந்த பிரபல பாடகி பவதாரிணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிலையில் பலரும் அவருடைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட அவர் தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இதனிடையே சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பவதாரிணி தொடர்ந்து படங்களில் பாடியும் வந்தார். இப்படியான நிலையில் பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சைக்கு சென்ற அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
மேலும் அது 4-ஆம் கட்டத்தில் இருந்ததால் உயிர் பிழைப்பது கடினம் என இங்குள்ள மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே பவதாரிணி சென்றிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சைக்கான முன்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் பவதாரிணி உயிரிழந்து விட்டதாக, அவரின் உறவுப்பெண் ஒருவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பவதாரிணியின் மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பாடல்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பவதாரிணி 1995 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான ராசையா படத்தில் இடம் பெற்ற “மஸ்தானா மஸ்தானா” பாடல் மூலம் தான் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அதற்கு முன்னதாகவே பவதாரிணி ஒரு படத்தில் பாடியுள்ளார். தனது 12 வயதில் திரைப்படத்தில் பாட முதல் முயற்சியை அவர் செய்துள்ளதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். தான் எப்படி பாடகியாக மாறினேன் என்ற கேள்விக்கு பவதாரிணி அளித்த பதில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, “சிறுவயதிலிருந்தே என்னுடைய குரல் வித்தியாசமாக இருப்பதாக என நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். வீட்டில் ஒவ்வொரு வருடமும் கொலு கண்காட்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் நான் தான் கர்நாடக இசையில் பாடல் பாடுவேன். அதில் என்னுடைய குரலைக் கேட்டு வித்தியாசமாக இருக்கிறது முறைப்படி பயிற்சி எடு என அறிவுரை வழங்கினார்கள்.
சினிமாவில் என்னுடைய முதல் முயற்சி அப்பா இசையமைத்து 1988 ஆம் ஆண்டு வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில்தான். அந்தப் படத்தில் வரும் “குயிலே குயிலே குயிலக்கா” என்னும் பாடலில் சில வரிகள் நான் பாடியிருப்பேன். யுவன் மட்டுமல்ல நானும் அப்பாவின் இசையில் பாடுவதற்கு கொஞ்சம் பயப்படவே செய்வேன். பாடல் பதிவின்போது அது அப்பாவின் இசையாக இருந்தால் கொஞ்சம் பதற்றம் அதிகமாக இருக்கும். அவர் என்னை பாட அழைத்ததில் இருந்து எனக்கு அந்தப் பதற்றம் தொற்றிக்கொண்டு விடும். என்ன மாதிரி பாடல், எப்படி இருக்கும் என சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்” என தெரிவித்திருப்பார்.