Coffee With Karan: ரன்வீருடன் காதல், வேறு நபர்களுடன் டேட்டிங்.. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் மனம் திறந்த தீபிகா படுகோன்!
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபல திருமண ஜோடி தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தங்களது உறவு குறித்து பேசிய விஷயங்கள் இணையதளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
காஃபி வித் கரண் 8
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி காஃபி வித் கரண். பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரண் ஜோஹரின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிபபார்கள். மேலும் பலவிதமான சர்ச்சைக்குரிய உணமைகளும் இந்த நிகழ்ச்சியில் வெளிவரும்.
பிற பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய பதிலை வரவழைக்கும் கேள்விகளை கேட்பதாக இந்த நிகழ்ச்சியின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் பங்கேற்பாளராக பாலிவுட்டின் பிரபல திருமண ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் கலந்துகொண்டார்கள்.
தீபீகாவின் கதையால் சர்ச்சை!
பாலிவுட்டின் மிகவும் புரிதல் உள்ள ஒரு தம்பதியாக பாராட்டப்படும் ஜோடி ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி. இவர்கள் பலவிதமான அனுபவங்களை தங்களது வாழ்க்கையில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடிகை தீபிகா தன்னுடைய காதல் உறவுகளைப் பற்றி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தீபிகா தானும் ரன்வீரும் காதலிக்கத் தொடங்கிய சமயத்தில் தான் வேறு சில ஆண்களையும் சந்தித்து வந்ததாகக் கூறியுள்ளார். எந்த விதமான உறவுச் சிக்கல்களிலும் மாட்டாமல் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டிய ஆசை தனக்கு இருந்ததாகவும், ரன்வீர் தனது வாழ்க்கையில் வருவதற்கு முன்புவரை தான் அப்படி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ரன்வீர் தனது வாழ்க்கையில் வந்த பிறகு எத்தனை ஆண்களை சந்தித்தாலும் மீண்டும் ரன்வீரைத் தேடி தான் அவரிடம் திரும்பி வந்ததாக அவர் கூறினார்.
ரன்வீர் பதில்
அவரைத் தொடர்ந்து பேசிய ரன்வீர், தாங்கள் காதலிக்கத் தொடங்கிய முதல் ஆறு மாத காலத்தில் தீபிகாவின் பின்னால் இரண்டு ஆண்கள் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறினார். அப்போது யார் அவர்கள் என்று கரண் ஜோஹரின் கேள்விக்கு பதிலளித்த தீபிகா, தான் அவர்களை மறந்துவிட்டதாக கூறினார். அருகில் இருந்த ரன்வீர் தனக்கு ரொம்ப நல்லாவே அந்த ஆண்கள் நினைவில் இருப்பதாகக் கூறினார். உடனே தீபிகா நாம் இதைப் பற்றி பிற்கு பேசலாம் என்று சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றினார்.
கலாச்சார காவலர்கள் விமர்சனம்
தீபிகா மற்றும் ரன்வீர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி மாறி மாறி பகிர்ந்துள்ளது இணையதளத்தில் பலவிதமான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக கலாச்சாரக் காவலர்களாக சமூக வலைதளங்களில் உலா வரும் ஒரு சிலர், இதனை அடிப்படையாக வைத்து இந்தத் தம்பதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள். மறுபக்கம் பிரபலங்களின் வாழ்க்கையில் இப்படியான ஒரு பக்கத்தைத் தெரிந்துகொண்ட அதிர்ச்சி எல்லா சாமானியர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.