Cinema Headlines: இந்தியன் 2 படத்தின் 6 பாடல்கள் வெளியீடு.. கருடன் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற, நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
முதல் நாளே மாஸ் காண்பித்த சூரி.. கருடன் படத்தின் வசூல் நிலவரம் இதுதான்!
சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள கருடன் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் சூரியின் மற்றுமொரு சிறப்பான பர்ஃபாமன்ஸால் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகிறது. இந்நிலையில், முதல் நாளான நேற்று மட்டும் கருடன் திரைப்படம் ரூ.3 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 பாடல்கள் வெளியாகின.. கமல்ஹாசன் - ஷங்கர் - அனிருத் கூட்டணி எப்படி இருக்கு?
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் முன்கூட்டியே வெளியாகி வரவேற்பினைப் பெற்று வருகின்றன. கமல்ஹாசனுடன் அனிருத் இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாரா, கேலண்டர் சாங், நீலோர்ப்பம், ஜகாஜகா, கம் பேக் இந்தியன், கதறல்ஸ் ஆகிய ஆறு பாடல்களைக் கொண்ட இப்படத்தின் ஜூக் பாக்ஸ் வெளியாகியுள்ளது.
விஜய்கிட்ட இத கத்துக்கணும்.. மோகன் சொன்ன அந்த வார்த்தை! துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!
தி கோட் படத்தில் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனான நடிகர் மோகன், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அவரிடம் தான் ரசித்த குணம் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “விஜய்கிட்ட இருந்து நிறைய விசயங்கள் கத்துக்க வேண்டி இருக்கு. அவரு ரொம்ப ரொம்ப அமைதியான நபர். இந்த அளவுக்கு அமைதியா இருக்குற அந்த குணத்த அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்னு நான் நிறைய டைம் விஜய்கிட்ட சொல்லி இருக்கேன். எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி, அத ரொம்ப அமைதியா உக்கார்ந்து ரொம்ப பொறுமையா கவனிப்பாரு. இத நான் அவர் கிட்ட இருந்து கத்துக்கணும்” என்று கூறியுள்ளார்.
என்றென்றும் மேடிக்கு இருக்கும் கிரேஸ் குறையவே குறையாது: ஆல் டைம் க்ரஷ் மாதவன் பிறந்தநாள் இன்று...
2000கள் தொடங்கி தமிழ் சினிமாவின் பெண்களின் கனவு நாயகனாக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பலவித கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் மாதவன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளாக தமிழ், இந்தி, எனக் கலக்கி வரும் நடிகர் மாதவன் இன்று தன் 54ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகரளும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தொடரும் ரஜினிகாந்தின் ஆன்மிகப் பயணம்.. இமயமலையில் மாஸ் புகைப்படங்கள்!
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, துபாய் சுற்றுலா சென்று திரும்பி, தற்போது ஆன்மிக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ரஜினிகாந்த் உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்குச் சென்று வழிபட்ட நிலையில், தற்போது அவர் இமயமலை செல்லு வழியில் மாஸ் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நண்பர்களுடன் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், வரும் ஜூன் 4ஆம் தேதி தன் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்புகிறார்.