Udhayam Theatre : வேட்டையன் படத்துடன் மூடப்படும் உதயம் தியேட்டர்...மண்ணோடு மண்ணாகப் போகும் அத்தனை நினைவுகள்
கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த உதயம் திரையரங்கம் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திற்கு பின் இடிக்கப்பட இருக்கிறது.
உதயம் திரையரங்கம்
சென்னையில் செயல்பட்டு வரும் பழமையான திரையரங்குகளில் ஒன்று உதயம் திரையரங்கம். சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திரையரங்கம் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வருகிறது. தொடக்கத்தில் உதயம் , சந்திரன் , சூரியன் , இந்த திரையரங்கில் முதல் முதலாக திரையிடப்பட்ட படம் ரஜினி நடித்த சிவப்பு சூரியன். ரஜினி நடித்த படையப்பா , பாட்சா , அருணாச்சலம் ஆகிய படங்கள் இந்த திரையரங்கில் 150 நாட்களை கடந்து ஓடியிருக்கின்றன. மேலும் 90 களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்களை கொண்டாட்டமாக பார்க்க ரசிகர்களின் கோட்டையாக மாறியது உதயம் தியேட்டர்.
அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் உதயம் திரையரங்கம்
1983-ஆம் ஆண்டு சென்னை அசோக் நகர் பகுதியில் உதயம் திரையரங்கம் கட்டப்பட்டது. 62,400 சதுர அடியில் அதாவது 1.3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த திரையரங்கத்திற்கு மொத்தம் 53 நபர்கள் பங்குதாரர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த திரையரங்கத்தை விற்க முடிவு செய்தார்கள். கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த பங்குதாரர்களில் ஒருவரான பரமசிவன் பிள்ளை 80 கோடி ரூபாய்க்கு இந்த திரையரங்கத்தை ஏலத்தில் சொந்தமாக்கினார்.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வருகைக்குப் பின் சென்னையின் பல்வேறு பழமையான திரையரங்குகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. அந்த வகையில் உதயம் திரையரங்கம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தனியார் அடுக்குமாடி கட்டிடம் வர இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின.
வேட்டையன் படத்துடன் முடிவுக்கு வரும் உதயம் திரையரங்கம்
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது. வேட்டையன் திரைப்படமே உதயம் திரையரங்கத்தில் திரையிடப்படும் கடைசி படமாக இருக்கும் என்றும் இதன்பின் திரையரங்கம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் 25 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் பழமையான அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கம் இன்னும் சில மாதங்களில் தரைமட்டமாக்கப் பட்டு மண்ணோடு மண்ணாக இருக்கிறது. பல நடிகர்களில் படங்கள் வெள்ளி விழா கண்ட இந்த திரையரங்கம் இனி ஒரு சில பாடல்களிலும் ரசிகர்களின் மனதிலும் மட்டுமே எஞ்சி இருக்கும்.