Love Story | `மாலா பிள்ளா’ முதல் `லவ் ஸ்டோரி’ வரை.. சாதிய முரண்பாட்டைப் பேசிய தெலுங்கு சினிமா!
சேகர் கம்முலாவின் `லவ் ஸ்டோரி’ படத்தின் வெற்றியின் மூலம், தெலுங்கு சினிமாவின் எதிர்காலம் மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதுவரை சாதிய முரண்பாடு குறித்து தெலுங்கு சினிமா எப்படி அணுகியது?
இயக்குநர் சேகர் கம்முலாவின் `லவ் ஸ்டோரி’ திரைப்படம் தெலுங்கு சினிமாவில் முக்கியமான திரைப்படமாகக் கருதப்படுகிறது. சாதி, பால் பாகுபாடு முதலானவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நாக சைதன்யா ரேவந்த் என்ற தலித் கிறித்துவராக நடித்திருக்கிறார்; சாய் பல்லவி உயர்சாதியைச் சேர்ந்த மௌனிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தலித் மக்களைப் பரிதாபக் கண்ணோட்டத்தோடு காட்டியிருக்கும் போது, இந்தப் படம் அவ்வாறாக இல்லாமல் பார்வையாளர்களின் கருணையை எதிர்பாராமல் உருவாகியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தலித் கதாபாத்திரங்கள் பலவீனமானவர்களாகக் காட்டப்பட்டு, பார்வையாளர்களின் பரிதாபத்தைப் பெறுமாறு உருவாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த `காஞ்சே’, `ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் கதாநாயகர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும் `காஞ்சே’ படத்தின் கதாநாயகன் வருண் தேஜ் திக்கித் திக்கிப் பேசும் பிரச்னையுடையவர். `ரங்கஸ்தலம்’ பட நாயகன் ராம் சரண் தேஜா செவித்திறன் இழந்தவராக நடித்திருந்தார். இந்தக் கண்ணோட்டம் தற்போது `லவ் ஸ்டோரி’ படத்தின் மூலம் இந்தக் கண்ணோட்டம் மாறியுள்ளது.
மேலும் இதில் தலித் கதாபாத்திரங்கள் உள்ள கதைகளில் இறுதிக்காட்சியில் இந்தக் கதாபாத்திரங்கள் ஏதேனும் `தியாகம்’ செய்து, தங்களை நிரூபிப்பதாகவும் உருவாக்கப்பட்டிருந்தது. வெவேறு சாதியினருக்கு இடையிலான காதலைக் குறித்து `தோரசனி’, `எவரிகி செப்போது’, `அர்ஜூன் ரெட்டி’, `ருத்ரவீணா’, `சப்தபடி’, `சீதகொக்கா சிலுகா’, `உப்பேனா’, `காஞ்சே’ முதலான படங்கள் சமீபத்தில் வெளியாகி, பேசியுள்ளன.
தெலுங்கு சினிமாவின் சாதிமறுப்புக் காதல்களைக் காட்டும் ட்ரெண்ட் தற்போது உருவானதல்ல. 1938ஆம் ஆண்டு வெளியான `மாலா பிள்ளா’ என்ற படத்தில் கிராமம் ஒன்றில், பார்ப்பனர் சமூகத்திற்கும், தலித் சமூகத்திற்கும் கோயிலுக்குள் நுழைதல், பொதுக் குளத்தைப் பயன்படுத்துதல், இரு சமூகத்தையும் சேர்ந்தோருக்கு இடையிலான காதல் எனப் பேசியிருந்தாலும், இதிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தோர் தியாகம் செய்துவிட வேண்டும் என்ற தொனியே இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் வெளியான `உப்பேனா’ படத்திலும் இதே பிரச்னை இருந்தது.
`மாலா பிள்ளா’ படம் அப்போதைய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானதாக இருந்ததாகவும், அம்பேத்கரின் சாதி ஒழிப்புப் பணிகளை இருட்டடிப்பு செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்த போதும், அப்போதைய புராணங்களின் அடிப்படையிலான திரைப்படங்களில் இருந்து பல வழிகளில் சிறப்பாக உருவாகியிருந்தது. தெலுங்கு சினிமாவில் சாதி எதிர்ப்புப் படங்கள் ஒருபக்கம் வெளிவந்தாலும், 2018ஆம் ஆண்டு உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனய் வழக்கில், கொலை செய்யத் திட்டமிட்ட பெண்ணின் தந்தையின் கதையை `மர்டர்’ என்ற பெயரில் படமாக வெளியிட்டார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
தெலுங்கு சினிமாவில் இயக்குநர் கே.விஷ்வநாத் இயக்கிய படங்கள் சாதி குறித்த கதைகளாக இருந்தன. எனினும் அவரது படங்களில் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பக்தியுள்ளவர்களாகவும், மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவும் உயர்வாக காட்டப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் உண்டு. பிற்காலத்தில் சாதி என்பதைத் தாண்டி, பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகளையும் தொட்டுச் சென்றிருக்கிறது தெலுங்கு சினிமா.
2003ஆம் ஆண்டு வெளியான `ஜெயம்’ படத்தில் ஏழை ஆணுக்கும், பணக்காரப் பெண்ணுக்கும் இடையிலான காதல் குறித்த கதை கூறப்பட்டிருந்தது. சமீபத்தில், தமிழில் வெளியான `அசுரன்’ படத்தின் ரீமேக்கான `நாரப்பா’ படத்திலும், சாதிய முரண்பாடு பொருளாதாரப் பிரச்னையாக மாற்றப்பட்டிருந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் தலித் மக்களுக்கு எதிராக கடந்த 30 ஆண்டுகளில் கரம்சேடு, சுண்டுரு ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்கள் நடந்த போதும், அதுகுறித்து பெரிதாக எந்தப் படங்களும் வெளியாகவில்லை. நடிகர் வெங்கடேஷ் நடித்த `ஜெயம் மனதேரா’ படம் ஒட்டுமொத்தமாக தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பற்றி பேசியது.
சமீபத்தில் `பலாசா 1978’ என்ற தெலுங்கு திரைப்படம் சாதி என்பதை சமூகப் பிரச்னை என்று முன்வைத்திருந்தது. எனினும், தமிழ் மொழியில் வெளியான கபாலி, காலா, பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டில் சந்தை ஒன்று உருவாகியிருக்கிறது. அதனைப் போல தெலுங்கு மொழியிலும் உருவாக வேண்டும் எனத் தெலுங்கு சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கான முன்னோட்டமாக `லவ் ஸ்டோரி’ படம் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம், தெலுங்கு சினிமாவின் எதிர்காலம் முற்றிலுமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.