Biggboss Tamil 5 | தாமரை ட்ராமா போட்றா, தண்ணி வராதுன்றா.. எங்க பல்லாவரத்துலயும்தான் தண்ணி வராது - ப்ரியங்கா பாவங்கள்
Biggboss Tamil 5 | தாமரை ட்ராமா போட்றா, தண்ணி வராதுன்றா.. பல்லாவரத்துலயும்தான் தண்ணி வராது என்ற ப்ரியங்காவை வைத்து ப்ரியங்கா பாவங்கள் என ஒரு ஷோவே ஆரம்பிக்கலாம்
Biggboss Tamil 5 | Episode 17
ராக்கோழிகளான ப்ரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் ஸ்மோக்கிங் ரூமில் கதையளந்து கொண்டிருந்தார்கள். தாமரை ட்ராமா போட்றா, தண்ணி வராதுன்றா.. பல்லாவரத்துலயும்தான் தண்ணி வராது என்ற ப்ரியங்காவை வைத்து ப்ரியங்கா பாவங்கள் என ஒரு ஷோவே ஆரம்பிக்கலாம். தாமரை தனது வறுமையை ஆயுதமாக பயன்படுத்துவதாக ப்ரியங்கா நிரூப்பிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அபிஷேக் இன்னும் ஒரு படி இறங்கி தாமரையின் மதுரை தமிழைக் கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார். ப்ரியங்கா தாமரைக்கு கம்மல், வளையல் கொடுத்ததையெல்லாம் சொல்லிக்காட்டிக் கொண்டிருந்தார். நிரூப் எந்த அசிங்கத்தையும் தட்டிக்கேட்காமல் ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டிருந்தார்.
அடுத்து சின்னப்பொண்ணுவுக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்த இமான், நீங்க நீங்களாவே இருங்க, மக்கள் போடுவாங்க மார்க்கு என்று சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு ராஜு, நிரூப் இரண்டு பேரும் இமானுக்கு நடிக்கும் சீன் வைத்தார்கள். அழுது, சிரித்து, அழுது, சிரித்து என மாற்றி மாற்றி ஏதோ செய்துகொண்டிருந்தார்கள்.
அடுத்த சீனில் Luxury Budget குறித்த அறிவிப்பு. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் நாணயங்கள் ஐந்து பெட்டிகளில் வைக்கப்படும். எந்த நாணயங்களையும் எடுத்துவிட்டு, பிக்பாஸுக்கு அறிவிக்கவேண்டும். யாராவது பிடிபட்டுவிட்டால், அவர்கள் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும். பிடிபட்டவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றார். டாஸ்க் நடக்கும்போது பிக்பாஸ் மாற்றங்களையும் அறிவிக்கலாம் என்றார்.
ஐய்க்கி பெரி ஒரு நாணயத்தை எடுக்க இமான் உதவி செய்தார். பாவனியும் ஐய்க்கிக்கு காவலிருந்தார். ப்ரியங்கா, சின்னப்பொண்ணுவின் உதவியுடன் அபிஷேக் ஒரு நாணயத்தை எடுத்துவிட்டார். இன்னொரு நாணயத்தை மதுமிதா எடுக்க, இன்னொன்றை வருண் எடுத்துவிட்டார். மற்றொன்றை பாவனி எடுத்துவிட்டார். ஐய்க்கி ஒளித்துவைத்த நாணயத்தை அக்ஷரா லவட்டிவிட்டார். மதுமிதாவிடம் இருந்து ப்ரியங்கா வாங்கி தன் துணிகளுக்குள் பதுக்கிக்கொண்டார். ப்ரியங்கா அபிஷேக்குக்கு ஒரு நாணயம் தருவதாகவும், இன்னொன்று கிடைத்தான் தாமரைக்கு தருவதாகவும் பேசிக்கொண்டிருந்தார்.
பாவனி தான் மறைத்து வைத்திருந்த நாணயத்தை பத்திரப்படுத்த எடுக்கும்போது அபினய் வந்தார். காவல் காக்க வந்த அபினயிடம், “யாருகிட்டயும் சொல்லாத” என்றார் பாவனி. உன்னை செருப்பால அடிப்பேன் என ஆங்கிலத்தில் சொன்னார் அபினய். அக்ஷராவைக் காப்பாத்துடா என அபிஷேக் சொல்ல, வருண் முடியாதுடா என்றார். நிரூப் பாவனியின் நாணயங்களை எடுப்பதைப் பார்த்த அபினய் கத்தியதால் நிரூப் பாதாள சிறைக்கு போய்விட்டார். பாவனி இன்னொரு நாணயத்தை எடுத்து சுருதியிடம் தந்ததை ராஜு பார்த்துவிட்டேன் என சொல்லியும், பாவனியும், சுருதியும் ஒப்புக்கொள்ளாமல் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள்.
நாணயங்கள் யாருக்குத்தான் சொந்தமாகும் என இனிதான் தெரியும்.