AVM Saravanan: பணிவின் சிகரம் ஏவிஎம் சரவணன்.. முதல்வர் இரங்கல், அஞ்சலி செலுத்தும் திரையுலகம்..
AVM Saravanan: ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமான நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏவிஎம் சரவணன் மறைவு:
தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார். பல தலைமுறைகளை கடந்தும், தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் என்ற வகையில் அவரது மறைவு திரையுலகமே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.வி.எம். மேயப்பன் அவர்களின் மகனான சரவணன், தந்தையின் பாதையில் தொடர்ந்து, AVM Productions நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர். அவரது தலைமையில் ஏவிஎம் ஸ்டுடியோ, இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பழமையான மற்றும் நம்பகமான திரைப்பட நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது.
முதல்வர் இரங்கல்:
ஏவின் சரவணனின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.
அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலகினர் இரங்கல்:
விஷால்
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சங்க தலைவரான விஷால் “திரையுலகின் மிகச்சிறந்த தயாரிப்பாளரும், ஏவிஎம் ஸ்டுடியோக்களை உருவாக்கியவருமான பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சார் காலமானார் என்ற செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டேன். அவர் நம் அனைவரையும் என்றென்றும் விட்டுச் சென்றார். எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ஐயா, நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைந்ததிலிருந்து, நான் ஒரு குழந்தையாக, உதவி இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக உங்களை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. இன்று நான் திரைப்படத் துறையில் இருப்பது போல் இருக்க இது ஒரு கற்றல் களமாக இருந்தது. உங்கள் திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, திரைப்படத் துறைக்கும் உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக பல நினைவுகள் மற்றும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்களைப் பாராட்டினர்.
நீங்களும் உங்கள் தயாரிப்பு நிறுவனமும் தொடர்ந்து சிறந்த படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன், ஆனால் இன்று இந்தியத் திரைப்படத் துறையில் மற்றொரு சிறந்த திரைப்பட ஆளுமையை இழக்க நேரிடும். உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும், மேலும் உங்கள் படங்கள் எப்போதும் ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கற்றல் களமாக இருக்கும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு கடவுள் மேலும் பலத்தை அளிக்கட்டும்
வைரமுத்து:
மதிப்புக்குரிய ஏவி.எம்.சரவணன் இயற்கை எய்திவிட்டார் இன்று என் அதிகாலையின் இருள் வடியவே இல்லை என்னசொல்லிப் புலம்புவது? 44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது என்று கலங்குவேனா? ஏவி.எம்மின் அடையாளம் போய்விட்டதே என்று வருந்துவேனா? ஆயிரம் பறவைகளுக்குக் கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே என்று வாடுவேனா? திரையுலகில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கலங்குவேனா? கலையுலகில் எங்களது சந்திப்பு மையம் வெறிச்சோடிவிட்டதே என்று விசும்புவேனா? நண்பர் சகோதரர் வழிகாட்டி இனி யார் உண்டு என்று தவிப்பேனா? தமிழ்த் திரையுலகின் வரலாறு சொல்லும் ஆசிரியர் மறைந்துவிட்டாரே என்று பதைப்பேனா? புரியவில்லை எனது மகா ரசிகர் ஏவி.எம் நிறுவனத்தில் அதிகமான பாடல் எழுதிய கவிஞர் என்ற அருமையான பெருமையை எனக்களித்தவர் எல்லாராலும் மதிக்கப்பட்ட வெள்ளுடை ஆளுமை கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம் அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் அவர் நினைவுகள் நீடு வாழும் என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக் காலமே கைகொடு என்ற் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்






















