அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கில் இருந்து விலகினாரா அபிஷேக் பச்சன்? ரீப்லேஸ் பண்றது இவர்தானா?
அய்யப்பனும் கோஷியும் பட இந்தி ரீமேக்கில் இருந்து அபிஷேக்பச்சன் விலகியதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் பிஜு மேனன் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். பிஜு மேனன் அய்யப்பன் என்னும் கதாப்பாத்திரத்திலும், கோஷி என்னும் கதாப்பாத்திரத்தில் ப்ரித்விராஜும் தங்களது ஈகோ மோதல்களை யதார்த்தமாக திரையில் படமாக்கியிருப்பார்கள். அதன் இயக்குனர் ஷாச்சி சமீபத்தில் காலமானார்.
இந்த சூப்பர் ஹிட் கதைக்களம், ஒரு சரியான அளவிலான டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருப்பதால், சரிக்கு சமமான காதப்பாத்திர வடிவமைப்பும் இருப்பதால், அனைத்து இந்திய மொழி திரைப்படங்களிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற மாதிரியெல்லாம் கற்பனைகளை அவிழ்த்து விட்டனர் நெட்டிசன்கள். தமிழிலும் அவரவர் அவரவர் விருப்ப நடிகர்களை சொல்லியிருந்தார்கள். ஆனால் மலையாளம் நம் அருகில், நாம் அதிகம் கவனிக்கும் இடத்தில் இருப்பதால், பெரும்பாலானோர் கண்டு விவாதித்துவிட்ட திரைப்படத்தை தமிழில் எடுக்க தயங்கி வருகிறார்கள். ஆனால் அதனை தொடர்ந்து தெலுங்கில் முதலில் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது. தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் அந்தப் படம் ரீமேக் ஆகி வருகிறது.
தற்போது இந்தியிலும் அய்யப்பனும் கோஷியும் படம் ரீமேக் ஆக உள்ளது. ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பச்சன் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது அபிஷேக் பச்சன் அந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்பட்டது. அபிஷேக் ஜான் ஆப்ரகாம் கூட்டணி தூம் மற்றும் தோஸ்தானா படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
எனவே இந்தக் கூட்டணி மூன்றாம் முறையாக இணைய இருப்பதை அடுத்து பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அபிஷேக் பச்சன் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. படத்திலிருந்து அவர் விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை. பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவர் வெளியேறினார் என்று கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் அவருக்குப் பதிலாக அர்ஜுன் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டமிட்டபடி நவம்பரில் அபிஷேக் பச்சன் இல்லாமல் திரைப்படம் துவங்குகிறது. ஜான் ஆபிரகாம் மற்றும் அர்ஜுன் கபூர் தற்போது 'ஏக் வில்லன் ரிட்டன்ஸில்' நடித்து வருகின்றனர்.அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருவரும் நன்றாக இணைந்துவிட்டதால், இதிலும் அதே கெமிஸ்ட்ரி தொடரும் என்று நம்பப்படுகிறது.
பார்த்திபன் ஒரே ஒரு கதாபாத்திரமாக திரையில் தோன்றி பல விருதுகளை குவித்து, அவரே இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் தற்போது நடித்து வருகிறார்.